வேட்பு மனு தாக்கல் மையத்துக்கு ‘போஸ்கூ’ டி-சட்டை அணிந்துவந்த மசீச உறுப்பினர்கள்

இன்று காலை மசீச கட்சியினர் அடங்கிய ஒரு கூட்டம், செமிஞ்யே இடைத் தேர்தல் வெட்புமனு தாக்கல் மையத்துக்கு, வந்திருந்தது. அவர்கள் அனைவரும் “Malu Apa Bossku (வெட்கப்பட என்ன இருக்கிறது, போஸ்)” என்ற வாசகத்தையும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் படத்தையும் கொண்ட டி-சட்டை அணிந்திருந்தார்கள்.

அவர்களில் ஒருவரான பெட்ரிக் ஈவ், மலேசியாகினியிடம் பேசினார். கோப்பெங் மசீச தலைவரான பெட்ரிக், சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான் மசீச உறுப்பினர்கள் பிஎன் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருப்பதாகக் கூறினார்.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் ஒப்பிடும்போது நஜிப்பே சிறந்த தலைவராம். அவர் சொன்னார். சீனர்கள் பணக்காரர்கள் என்று கூறுவதே மகாதிருக்கு வழக்கமாகி விட்டது என்றும் ஈவ் கூறினார்.

“நஜிப் ஒரு மகத்தான தலைவர். அவரது தோல்வி சீனர் சமூகத்துக்கும் மலேசியாவுக்கும் பெரிய இழப்பாகும்”, என்றாரவர்.

நஜிப் சமூக வலைத்தளங்களில் தம் கருத்துகளைப் பதிவிடுவதன்மூலம் மீண்டும் செல்வாக்கு பெற்று வருகிறார். ”மாலு அபா, போஸ்கூ” என்பது சமூக வலைத்தளங்களில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு டேக்லைன்.

அதே வேளை, பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களை அடிக்கடி இடிதுரைப்பதாலும் கிண்டல் செய்வதாலும் நஜிப்பை “லொள்ளு மன்னன்” என்றுகூட அழைக்கிறார்கள்.

பிஎன் வென்ற கேமரன் மலை இடைத் தேர்தலின்போது அடிக்கடி அங்கு சென்று முகம் காட்டியதுபோல் செமிஞ்சே-இலும் தன்னைக் காட்டிக் கொள்ள நஜிப் தவற மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.