பிரதான கூட்டணிகளை எதிர்த்து போராட, மக்களிடமிருந்து நிதி உதவியை எதிர்ப்பார்க்கிறது பிஎஸ்எம்

செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தலை முன்னிட்டு, தனது வேட்பாளருக்கு நிதி திரட்டும் வகையில், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) நிதி திரட்டு பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

எந்தவொரு கூட்டணியிலும் இணையாமல், தனித்து நிற்கும் பிஎஸ்எம், பக்காத்தான் ஹராப்பான் போன்ற பெருங் கூட்டணிகளுடன் மோத, தங்களுக்குப் பணபலம் தேவை என்றும், மக்கள் உரிமைக்காகவும் அவர்களின் நலனைப் பாதுகாக்கவும், எப்போதும் போராடிவரும் தங்களுக்கு, பொது மக்கள் நிதியளித்து ஒத்துழைப்பார்கள் என நம்புவதாகவும் ஒரு முகநூல் பதிவில் அக்கட்சி கூறியுள்ளது.

ஹராப்பான் மற்றும் பாரிசான் அரசியலைத் தவிர்த்து, தற்போது மலேசியர்களுக்கு ஒரு மாற்று அரசியல் தேவைப்படுவதாகவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

“அரசியல் யதார்த்தம் என்னவென்றால், மூன்றாவது சக்தியாக உருவெடுக்க, பிஎஸ்எம்-இன் வலிமையும் வளங்களும் இன்றளவில் மிகவும் குறைவாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஓர் இடைத்தேர்தலை எதிர்கொண்டு, எங்கள் வேட்பாளரை நிறுத்துவது என்பது, பிரதானத்துக்கு எதிரானது.

“இருப்பினும், சமுதாயத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும், அழுத்தங்கள் கொடுக்காமல், பிரதானத்திற்கு எதிராகச் செல்ல முயற்சித்ததில்லை? ஒவ்வொரு போராட்டமும் எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துகிறது.

“2008-ல், மாநில ஆட்சி மாறியபோதும், 2013-ல் மத்திய அரசாங்கம் மாறியபோதும், பல முன்னேற்றகரமான மாற்றங்கள் நிகழும் என நாங்கள் எதிர்ப்பார்த்தோம். ஆனால், பிஎன் ஆட்சியில் நடந்தவையே, இன்றளவும் நடந்தேறி வருகின்றன.”

“கொடுத்த வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், சில வாக்குறுதிகளில் பின்வாங்கிய (யு டெர்ன்) நிலையில், பிஎன் –னுக்கும் ஹராப்பானுக்கும் பெரிய மாற்றம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.”

“மிகக் குறுகிய காலத்தில், ஹராப்பான் அரசாங்கத்தை மதிப்பிடுவது சரியல்ல என்று சிலர் கருதுகின்றனர், இன்னும் சிலரால் காத்திருக்க முடியவில்லை……”

எது எப்படியாகினும், ஒரு மிகப் பெரிய சவாலாக இருந்த போதிலும், செமினியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகப் பிஎஸ்எம் கூறியுள்ளது.

எனவே, அக்கட்சியின் மீது நம்பிக்கை கொண்ட பொது மக்களை, தங்களால் இயன்ற நிதியளிக்கும்படி அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.