நீதித்துறையில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அதிரடியாக ஒரு குற்றச்சாட்டு முன்மைக்கப்பட்டிருப்பதை அடுத்து அதை விசாரிக்க அரச ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இன்றைய நிலையில் அது அவசியமும் அவசரமுமான ஒன்றாகும் என்று அது கூறிற்று.
தலைமை நீதிபதிக்கு எதிரான நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பக்காரின் பிரமாண பத்திரம்மீது வழக்குரைஞர் மன்றம் மெளனமாக இருப்பதாக வழக்குரைஞர் சங்கீத் கவுர் டியோ குற்றஞ்சாட்டியிருப்பதை வழக்குரைஞர் மன்றத் தலைவர் ஜார்ஜ் வர்கீஸ் மறுத்தார்.
முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியான ஹமிட் சுல்தான், தம் பிரமாண பத்திரத்தில் சில தனியார் தரப்புகள் அரசாங்கத்தை ஏமாற்ற நீதிபதிகளில் சிலர் துணை போகிறார்கள் என்று கூறியிருந்தார்.
வழக்குரைஞர் மன்றத் தலைவர் வர்கீஸ், வழக்குரைஞர் மன்றத்தைப் பொருத்தவரை அது எப்போதுமே நீதித்துறையின் நேர்மை காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்து வந்துள்ளது என்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஹமிட் நீதித்துறையில் குறுக்கீடுகள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய விவகாரத்தில் வழக்குரைஞர் மன்றம் கருத்துரைக்காமல் மெளனமாக இருந்து விட்டதென்ற அவரது (சங்கீத்தின்) குற்றச்சாட்டு ஆதாரமற்றது.
“முறையீட்டு நீதிமன்றத்தில் எம்.இந்திராகாந்தி வழக்கில் தாம் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததை உயர் நீதிபதி ஒருவர் ‘கடுமையாகக் கண்டித்தார்’ என்றும் அதன் பின்னர் கூட்டரசு அரசமைப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளையும் பொதுமக்கள் நலம் சார்ந்த வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பு தமக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றும் ஹமிட் 2018, ஆகஸ்ட் 20-இல் முதன்முதலாக தெரிவித்தபோதே வழக்குரைஞர் மன்றம் ஓர் அறிக்கை வெளியிட்டது.
“அந்த அறிக்கையில் நீதித்துறை முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டை விசாரிக்கவும் நீதித்துறையை முழுமையாகச் சீரமைத்து வலுப்படுத்த தக்க பரிந்துரைகளை முன்வைக்கவும் ஆர்சிஐ உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.
வழக்குரைஞர் மன்றம் நவம்பரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலும் 2019 ஜனவரி மாதம் நிகழ்ந்திய ஓர் உரையிலும் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதாக வர்கீஸ் கூறினார்.