‘பெர்சே’ ஏற்பாடு செய்யும் விவாதத்தில் கலந்துகொள்ள, பிஎஸ்எம் வேட்பாளர் தயார்

செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) வேட்பாளர், நிக் அஸிஸ் அஃபிக் அப்துல், பெர்சே ஏற்பாடு செய்யும் வேட்பாளர் விவாதத்தில் கலத்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பிப்ரவரி 25-ம் தேதி, மலேசிய நோர்த்திங்ஹெம் பல்கலைக்கழகத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் 4 வேட்பாளர்களும் கலந்துகொள்ளும் வகையில், விவாத மேடை ஒன்றைப் பெர்சே திட்டமிட்டுள்ளது.

“பெர்சே குறுந்தகவல் மற்றும் மின் அஞ்சல் மூலம், எனது சம்மதத்தைக் கேட்டிருந்தது, நான் சரி என்று கூறியிருக்கிறேன். விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன், இதுபோன்ற விவாதங்கள் தேவை என்று நான் நினைக்கிறேன்.

“ஜனநாயகம் நமது நாட்டில் செழித்து வளர்ந்து வருவதை, இது காட்டுகிறது. இது வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதமேடை, ஒரு நாள் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே இத்தகைய விவாதங்கள் நடக்கலாம், நாம் அதனை எதிர்பார்ப்போம்.

“எந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று, இன்று செமினி பட்டணத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

விவாதத்தில் கலந்துகொள்ளாத வேட்பாளர்களைப் புறக்கணிப்போம்

இதற்கிடையில், பத்திரிகை மாநாட்டில் கலந்து கொண்ட பிஎஸ்எம் மத்தியச் செயலவை உறுப்பினர், எஸ் அருட்செல்வன், விவாதத்தில் கலந்துகொள்ள மறுக்கும் வேட்பாளர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“நாம் கேமரன் மலை இடைத்தேர்தல் விவாதத்தில் பார்த்தோம், பிஎன் வேட்பாளர்கள் விவாதத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த ஆரோக்கியமற்ற கலாச்சாரத்தை நான் இங்கு நினைவுகூர விரும்புகிறேன், தொலைக்காட்சியில் அன்று, மக்கள் ஒரு வேட்பாளரின் தகுதியையும் அவரின் சேவைகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர்.

“எனவே, விவாத மேடையில் கலந்துகொள்ளாத வேட்பாளர்களை, நாம் புறக்கணிக்க வேண்டும்,” என்றார் அவர்.