‘உறுதியாக தெரியவில்லை என்றால், பிஎஸ்எம்-ஐ ஆதரியுங்கள்’, பாஸ்-க்கு பிஎஸ்எம் வலியுறுத்து

செமினி இடைத்தேர்தல் | பாஸ் கட்சியின் நிலைப்பாட்டில் குழப்பம் அடைந்திருக்கும் அதன் உறுப்பினர்களைத் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கேட்டுக்கொண்டது.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர்கள் தெளிவான எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென பிஎஸ்எம் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் சொன்னார்.

“பிரதமர் டாக்டர் மகாதீரின் அறிவிப்பை நாம் கேட்டுவிட்டோம், ஆனால், பாஸ் தரப்பு நிலைப்பாடு என்னவென்று இன்னும் தெரியவில்லை.

“இங்கு முக்கியம் என்னவென்றால், நமக்கு ஓர் எதிர்க்கட்சி தேவை. ஆனால், பாஸ் அதில் மௌனமாகவே இதுவரை உள்ளது.

“தெளிவாக இல்லாத (தங்கள் நிலைப்பாட்டில்) கட்சியைத் தேர்ந்தெடுப்பது ஆபத்தானது, தெளிவான எதிர்க்கட்சி வேண்டும், பிஎஸ்எம் தெளிவான ஓர் எதிர்க்கட்சி. பாஸ் – அம்னோ ஒத்துழைப்பு கூட சந்தேகம்தான்.

“பாஸ்-அம்னோ கூட்டணியிலான எதிர்க்கட்சி வலுவிழந்து வருகிறது என நாங்கள் நினைக்கிறோம்,” என அருட்செல்வன் கூறினார்.

பாஸ் உறுப்பினர்களான தன் நண்பர்களில் பலர், பாரிசான் அல்லது ஹப்பானுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று, செமினி இடைத்தேர்தல் பிஎஸ்எம் வேட்பாளர் நிக் அஸிஸ் தெரிவித்தார்.

“ஹராப்பான் கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் அவர்கள், தற்போது பாஸ்-அம்னோ உடனான உறவு பற்றிய குழப்பம் வேறு அவர்களிடையே, ஆக, இது எங்களுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

“என் போராட்டங்களைப் புரிந்துகொண்ட பாஸ் உறுப்பினர்கள், பிஎஸ்எம் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நான் நம்புகிறேன், எனக்கு வாக்களிக்குமாறு அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் நிக் அஸிஸ்.