மரண தண்டனையை ஏன் ஒழிக்க வேண்டும், அம்பிகா கூறும் 2 காரணங்கள்

முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர், எஸ் அம்பிகா, கட்டாய மரண தண்டனை இரத்து செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை அம்பிகா கோடிட்டுக் காட்டினார், ஒன்று மரணத் தண்டனை குற்றங்களைத் தடுக்கவில்லை மற்றும் அப்பாவிகள் தண்டனை பெறும் சாத்தியம் உள்ளது.

“மரண தண்டனை முழுமையாக அகற்றக் கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அது வேலை செய்யவில்லை, இங்கு கூடியிருப்பவர்களில் 100 பேர் ‘அது வேலை செய்கிறது’ என்று கூறலாம், ஆனால் அதற்கு தகுந்த ஆதாரம் இல்லை,” என அவர் தெரிவித்தார்.

“இரண்டாவது காரணம், குற்றம் செய்யாதவர் தண்டிக்கப்படலாம். இந்தத் தவறு நடந்துள்ளதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. குற்றம் செய்யாத ஒருவரின் உயிரை எடுத்துவிட்டு, நம்மால் எப்படி சொல்ல முடியும், குற்றங்களைக் குறைக்க அந்த தண்டனை வழங்கப்பட்டது என்று.

“இது என்னால் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. பழி வாங்குதல், ஓர் அடிப்படை தண்டனையாக இருக்க முடியாது.

“மரண தண்டனை அகற்றப்பட வேண்டிய ஒன்று, கண்டிப்பாக அதனை ஒழிக்க வேண்டும்,” என்றார் அவர்.

மக்களவையில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மரண தண்டனையை இரத்து செய்வதற்கான மசோதா, அடுத்த மாதம் மக்கள் அவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, பிரதமர் துறை அமைச்சர் லியு வூய் கியோங், அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அதற்கான சட்ட ஆவணங்களை வழங்குவதற்கான கடைசி கட்ட வேலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

எட்டு சட்டங்களின் கீழ், குற்றவியல் சட்டம் (கொலை) பிரிவு 302 உட்பட, 33 குற்றங்களுக்காக மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக அவர் அறிவித்தார்.

இருப்பினும், பிப்ரவரி 14-ம் தேதி, அரசு சாரா நிறுவனங்கள், கைதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று லியூ தெரிவித்தார்.