14வது பொதுத் தேர்தலில் பெர்சத்து செமிஞ்யே-இல் வெற்றி பெற்றது என்றால், அதற்கு அம்னோவும் பாஸும் அங்குக் களமிறங்கி வாக்குகளைச் சிதறடித்ததுதான் காரணமாகும். வரப்போகும் இடைத் தேர்தலில் அப்படி நடக்கும் சாத்தியமில்லை.
செமிஞ்யே-இல் உள்ள 23 வாக்களிப்பு வட்டங்களில் ஒன்று பண்டார் தாசேக் கெசுமா. வாக்காளர்களை அதிகம் கொண்டுள்ள வட்டங்களின் வரிசையில் அது நான்காவது இடத்தில் உள்ளது. அங்கு 2018 தேர்தலில் பெர்சத்து 48.35 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. பிஎன்னுக்கு 30.22 விழுக்காடும், பாஸுக்கு 16.84 விழுக்காடும் பிஎஸ்எம்-முக்கு 3.54 விழுக்காடும் கிடைத்தன.
அப்போது பாஸ் கட்சியை ஆதரித்த வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் பிஎன்னை ஆதரிப்பார்களானால் பெர்சத்து வெற்றிபெற கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
அந்நிலையில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக விளங்கும். வாக்காளர்களுக்கு பக்கத்தான் ஹரப்பான் அரசின்மீது சிறிதளவு அதிருப்தி ஏற்பட்டால்கூட அது பெர்சத்துவுக்குப் பாதகமாக அமையலாம்.
அப்பகுதியில் நடத்தப்பட்ட மேலோட்டமான ஒரு கருத்துக்கணிப்பில் பாஸ் அதரவாளர்கள் அம்னோ பக்கம் சாய்வது தெரிகிறது. சிலர் ஹரப்பான் அரசின்மீது நம்பிக்கையும் இழந்துள்ளனர்.
பாஸ் ஆதரவாளர்களில் ஒருவரான நஸ்ரி முகம்மட் பாட்சில்,54, இம்முறை வெற்றி பிஎன்னுக்குத்தான் என நம்புகிறார்.
“பிஎன்தான் வெற்றி பெறும். செமிஞ்யே எப்போதும் பிஎன் கோட்டைதான். பாஸ்கூட கடந்த பொதுத் தேர்தலில்தான் இங்கு வந்தது”, என்றார்.
பிஎன், ஒரு கோட்டையாக விளங்கிய செமிஞ்யே-யைக் கடந்த பொதுத் தேர்தலில்தான் முதன்முறையாக தோற்றது.
அதில் பெர்சத்துவுக்கு 23,428 வாக்குகளும் அம்னோவுக்கு 14,464 வாக்குகளும், பாஸுக்கு 6,966 வாக்குகளும், பிஎஸ்எம்-முக்கு 1,293 வாக்குகளும் கிடைத்தன.
இதனிடையே, பிஎன் ஆதரவாளரான ஜுரியா ஷாருடின் தன்னுடைய வாக்கு முன்னாள் ஆளும்கட்சிக்குத்தான் என்பதில் உறுதியாக உள்ளார்.
“நீங்கள் என்ன சொன்னாலும் எனக்கு பிஎன்தான், அம்னோதான். அம்னோதான் மலாய்க்காரர்களுக்காகவும் சமயத்துக்காகவும் அரச அமைப்புக்குக்காகவும் போராடும் கட்சி”, என்றார் அந்த 75வயது பெண்மணி.
இப்படிப்பட்ட பாஸ், அம்னோ ஆதரவாளர்களைத்தான் பெர்சத்து மாற்ற வேண்டும்.
இம்முறை பாஸ் போட்டியில் குதிக்கவில்லை. போட்டியினின்றும் ஒதுங்கிக்கொண்ட அது பிஎன்னுக்கு ஆதரவாக செயல்படுமா என்பதும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், பாஸ் அடிநிலை உறுப்பினர்கள் பிஎன் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
பாஸ் மற்றும் அம்னோ ஆதரவாளர்களைத் தன் பக்கம் இழுப்பது மட்டுமே பெர்சத்துவை எதிர்நோக்கும் பெரும் பிரச்னை அல்ல. கடந்த பொதுத் தேர்தலில் தன்னை ஆதரித்தவர்களைப் பிடித்து வைத்துக்கொள்வதும் அதற்கு ஒரு பெரிய சவாலாகத்தான் விளங்கும்.
சிலருக்கு ஆளும் கட்சிமீது வைத்திருந்த நம்பிக்கை சிறிதுசிறிதாக குறையத் தொடங்கியுள்ளது.
பலகாரங்கள் தயாரித்து விற்றுப் பிழைப்பு நடத்தி வரும் ஜமிலா அகமட் ஷுகேரி,50, வாழ்க்கைச் செலவினம் குறையவில்லையே என்று முறையிட்டார்.
“விலைகள் உயர்ந்து கொண்டே போகின்றன. என்னுடைய வியாபாரத்தில் அதை உணர முடிகிறது”, என்றார்.
பண்டார் தேசேக் கெசுமாவைப் பொருத்தவரை அது மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு பகுதி என்றாலும் அங்கு ஒரு பள்ளிவாசல் இல்லாததை அவர்கள் பெருங் குறையாக நினைக்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்குமேலாக பள்ளிவாசலுக்குக் காத்திருப்பதாகக் கூறினார் ஷாபி ஒமார்.
“ஒரு சூரா-வைத்தான் (தொழுகை இல்லத்தை) பயன்படுத்திக் கொள்கிறோம். பதின்மூன்று ஆண்டுகளாகி விட்டது, இன்னும் பள்ளிவாசல் கட்டப்படவில்லை.
“மலாய்க்காரர்கள் பெரும்பானமையாக உள்ள ஒரு பகுதி. இங்கு ஏன் ஒரு பள்ளிவாசல் இல்லை?”, என்றவர் வினவினார்.
இப்படிப் பலரும் பல்வேறு குறைபாடுகளைத் தெரிவித்தனர். பக்கத்தான் ஹரப்பான், வாக்காளர்களின் ஆதரவைப் பெற விரும்பினால் அவர்களின் குறைபாடுகளைப் போக்க வேண்டும். அதை வாக்களிப்புக்குமுன் எஞ்சியுள்ள இன்னும் 12 நாள்களில் செய்து முடிக்க வேண்டும்.