உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் முறையீடு இரத்து: ரந்தாவில் இடைத் தேர்தல்

அம்னோ இடைக்காலத் தலைவரும் முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசாருமான முகம்மட் ஹசானின் தேர்தல் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் நெகிரி செம்பிலான் ரந்தாவில் ஓர் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இசியும் முகம்மட் ஹசானும் தாக்கல் செய்த முறையீடுகளைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்ஜோம். பிகேஆர் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராமுக்கு முறையீடு செய்யச் சட்டத் தகுதி உண்டு என்றார்.

தேர்தலின்போது நிகழ்ந்த தவறுகளை ஸ்ரீராம் முறைப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்றவர் தீர்ப்பில் கூறினார்.

இசியும் முகம்மட்டும் ஆளுக்கு ரிம10,000 செலவுத் தொகை கொடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நீதிமன்றம், வேட்பாளர்(ஸ்ரீராம்) அல்லது அவரை முன்மொழிந்தவர் அல்லது வழிமொழிந்தவர் வேட்புமனு தாக்கல் செய்யும் மையத்துக்குள் செல்வதற்கு அனுமதிகளை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமோ சட்டமோ கிடையாது என்று தீர்ப்பளித்ததை அடுத்து ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இசி பாஸ் தன்னிடம் இல்லை என்பதற்காக வேட்புமனு தாக்கல் மையத்துக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி ஸ்ரீராம் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஸ்ரீராமுக்கு அனுமதி மருக்கப்பட்டதைத் தொடர்ந்து முகம்மட் ஹசான் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதாக முகம்மட் கூறினார்.

“அந்தத் தீர்ப்பை மதிக்கிறேன். இடைத் தேர்தலுக்கு நீண்ட காலமாகவே தயாராகி வருகிறேன்”, என்றவர் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ரந்தாவ் முகம்மட் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ள ஒரு தொகுதி. 2018-இல் அவருக்குக் கிடைத்தது நான்காவது வெற்றி. அதற்கு முந்திய தேர்தல்களில் எல்லாம் அவர் 60விழுக்காடு வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற ஸ்ரீராம், நீதி நிலைநாட்டப்பட்டது”, என்றார்.

எதிர்வரும் இடைத் தேர்தலிலும் பிகேஆர் தன்னையே வேட்பாளராக நியமிக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.