குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும், பிஎஸ்எம் தேர்தல் அறிக்கை

செமினி இடைத்தேர்தல் | இன்று காலை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), செமினி வாழ் மக்களுக்குத் தேவையான, 7 அம்சங்களை உள்ளடக்கிய தனது இடைத்தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

செமினியில் மீண்டும் குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என பிஎஸ்எம் தனது இடைத்தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செமினி விரைவாக மேம்பாடு அடைந்து வருவதாகவும், நிறைய வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறிய பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ், உள்ளூர்வாசிகள் வாங்க இயலாத நிலையில் அவ்வீடுகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

“அண்மைய காலத்தில், 10 புதிய வீடமைப்புத் திட்டங்கள் செமினியில் உருவாக்கப்பட்டுள்ளன. நியாயமற்ற விலையில் அதிகமான சொகுசு வீடுகள் கட்டப்பட்டு, பல வருடங்களைக் கடந்தும், இன்னும் விற்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. செமினி வாழ் இளைஞர்களால், RM300,000-லிருந்து RM600,000 வரை விற்கப்படும் அவ்வீடுகளை வாங்க இயலவில்லை. அதனால், பலர் இன்னும் வாடகை வீடுகளிலேயே வசிக்கின்றனர்,” என நிக் மலேசியாஇன்றுவிடம் சொன்னார்.

“ஆகையால், மக்கள் பிரதிநிதியாக, கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், வீடமைப்புத் திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே, மேம்பாட்டாளர்களிடம் கலந்துபேசி, சில விதிமுறைகளை இறுக்குவதன் மூலம், வீட்டு விலைகளைக் கட்டுப்படுத்த நாங்கள் முயற்சிப்போம்,” என்று அவர் கூறினார்.

பி.எஸ்.எம்., செமினி கிளை அலுவலகத்தில், தங்களின் இடைத்தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர், நிக் அஸிஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

உள்ளூர் மக்களுக்கு ஆதரவான, திட்டமிடப்பட்ட மேம்பாட்டு வசதிகள், வசதியான பொதுப் போக்குவரத்து, சுகாதாரச் சேவைகள் போன்றவையும் அந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

“செமினி மக்களில் பலர் பொதுப் போக்குவரத்தை நம்பியே இருக்கின்றனர். ஆனால், இங்கே பேருந்து சேவைகள் முறையாக செயல்படுவது இல்லை.

“எனவே, பேருந்து சேவைகளை அதிகரிப்பதுடன், இரயில் மற்றும் எம்.ஆர்.டி சேவைகளை உருவாக்கி, பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் திட்டங்களும் உள்ளன,” என்றார் நிக்.

மேலும், சில்க் அல்லது லெக்காஸ் – காஜாங் பத்து 3 அல்லது பிளாஸ் புத்ரா மக்கோத்தா நெடுஞ்சாலைகளில், ஏதாவது ஒன்றினை அகற்றும் திட்டமும் உள்ளதாக அவர் சொன்னார்.

“அருகில் உள்ள காஜாங், செர்டாங் மற்றும் சிரம்பான மருத்துவமனைகளில் நோயாளிகள் மிக அதிகம், நெரிசலாக இருக்கிறது. மூத்த குடிமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, உள்ளூர் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

“அதுமட்டுமின்றி, அவசரகாலத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்ல, மற்ற மருத்துவமனைகளில் இருந்துவரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட நேரத்தை எடுத்துகொள்வதால், செமினியில் ஓர் ஆம்புலன்ஸ் மையத்தை ஏற்படுத்த வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

மேலும் அந்த இடைத்தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் :-

  • அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில், மாதந்தோறும் வசூலிக்கப்படும் பராமரிப்பு தொகை இரத்து செய்யப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை, வீட்டுவரி மட்டும் கட்ட பிரச்சாரம் செய்தல்.
  • புக்கிட் புரோகாவை இயற்கை சுற்றுச்சூழல் பகுதியாகவும் பொழுதுபோக்கு தளமாகவும் பாதுகாத்தல், மேம்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்.
  • பதவி துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்ச ஊழலைத் தடுக்க, ஊராட்சிமன்றம், கிராமம் மற்றும் வீடமைப்புப் பகுதி தலைவர்களுக்கானத் தேர்தல் நடத்துதல்.
  • செமினி வட்டார இடைநிலைப் பள்ளிகளில்,  மீண்டும் படிவம் 6 வகுப்புகளை ஏற்படுத்த முயற்சி செய்தல்.

தற்போது 6-ஆம் படிவ மாணவர்கள், காஜாங் இடைநிலைப் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டி உள்ளதாக நிக் அஸிஸ் தெரிவித்தார்.

அவருடன் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் மற்றும் பொருளாளர் சோ சொக் வா ஆகியோரும் இருந்தனர்.