ஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு அறிக்கை இல்லை

செமினி இடைத்தேர்தல் | பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், முகமட் ஐமான் ஜைநாலி, செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கென, சிறப்பு அறிக்கை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

மாறாக, மருத்துவமனை கட்டுமானம் உள்ளிட்ட, செமினி மக்களுக்குத் தேவையான வசதிகளுக்காகப் போராடப் போவதாக அவர் சொன்னார்.

“(தேர்தல் அறிக்கை) இல்லை, எனக்கு சொந்த திட்டங்கள் இருக்கின்றன. அதைத் தேர்தல் வாக்குறுதியாக்குவது…. நான் விரும்பவில்லை.

“நான் என் திட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், மருத்துவமனை கட்டுமானம் (திட்டம்) தேர்தல் வாக்குறுதி அல்ல, ஆனால் அதற்காக முயற்சிப்பேன். வெற்றிப்பெற்றால், அதற்காகப் போராடுவேன்,” என்று இன்று, செமினியில், பெரானாங் விவசாயிகள் அமைப்பின் உணவு மையத்திற்கு வருகை தந்தபோது அவர் சொன்னார்.

செமினியில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. எனவே, இங்கு ஒரு மருத்துவமனை கட்ட வேண்டியது, இப்போது கட்டாயமான ஒன்றாக உள்ளது.

“வாக்காளர்களைச் சந்தித்த போது, இதனை நான் கூறி வருகிறேன்,” என்றார் அவர்.

சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் சிறப்பு குழு ஒன்றை அமைக்க உள்ளதாகவும் ஐமான் குறிப்பிட்டார்.

மாநில அரசாங்கம் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் அது மக்களை முழுமையாக சென்றடையவில்லை. ஆகவே, அனைத்து தகவல்களும் முறையாக மக்களைச் சென்றடைய, இந்தச் சிறப்புக்குழு பணியாற்றும் என்றார் அவர்.