அமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கார்களையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தே தன்னுடைய கருத்துமாகும் என தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே கூறியது.
“அதிகாரத்துவ காரையும் பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இசி-இன் கருத்தை பெர்சே 2.0உம் பகிர்ந்து கொள்கிறது”, என பெர்சே தலைவர் தாமஸ் பான் கூறினார்.
“அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டபோது அவர்கள் தனியார் மற்றும் கட்சி நிகழ்வுகளுக்குச் செல்கையில் அதிகாரப்பூர்வ கார்களையும் ஓட்டுனர்களையும் பாதுகாவலர்களையும் பயன்படுத்திக்கொள்வது அனுமதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் பிரச்சாரங்களின்போது அரசாங்கச் சொத்துகளைப் பயன்படுத்துவது தவறாகாது”, என பான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“ஆனால், அவர்கள் அரசாங்கத்தின் சரக்குந்துகள், மின்னாக்கிகள், கூடாரங்கள் போன்றவற்றையும் அரசாங்க அதிகாரிகளையும் பயன்படுத்துவது தவறு”, என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இசி தலைவர் அஸ்ஹார் அசிசான், குறிப்பிட்ட அரசுச் சொத்துகளைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பயன்படுத்துவதில் இசிக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்ததாக மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான் நேற்றிரவு கூறியிருந்தது.