இடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே அழைப்பை, ஹராப்பான் வேட்பாளர் நிராகரித்தார்

செமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாடு செய்துள்ள, விவாத மேடைக்கான அழைப்பை, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், முகமட் ஐமான் ஜைலானி நிராகரித்துள்ளார்.

அதுபற்றி கேட்டபோது, “எந்த விவாத மேடை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விளக்கமாகக் கூறியபோது, “ஓ, பெர்சே (ஏற்பாடு).

“நாங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை,” என, இன்று காலை, கம்போங் பாரு செமினியில் சந்தித்தபோது, அந்த மின்சாரத் துறை சார்ந்த பொறியியலாளர் தெரிவித்தார்.

கடந்த கேமரன் மலை இடைத்தேர்தல் நடைமுறை, ஏன் இப்போது மாறுபட்டுள்ளது எனக் கேட்டபோது, “ஆமாம், பிறகு பார்ப்போம்,” என அவர் கூறினார்.

“ஆனால், இப்போது அதில் கலந்துகொள்ளும் எண்ணம் இல்லை,” என்ற அவர், அது குறித்து மேலும் விளக்கம் அளிக்கவில்லை.

பாரிசான் வேட்பாளர், ஜகாரியா ஹனாஃபியும், வாக்காளர்களைச் சந்திப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறி, இந்த விவாதமேடையைப் புறக்கணித்துள்ளார்.

இதுவரை, பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ் அஃபிக் அப்துல் மட்டுமே, அதில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும், பிப்ரவரி 25-ம் தேதி, மலேசிய நோர்த்திங்ஹெம் பல்கலைக்கழகத்தில், செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு, பெர்சே அந்த விவாத அரங்கை ஏற்பாடு செய்துள்ளது.