விவாத அரங்கம் : பாரிசான் – ஹராப்பான் வேட்பாளர்கள் கலந்துகொள்ள மறுப்பு, பெர்சே ஏமாற்றம்

செமினி இடைத்தேர்தல் | தேர்தல் சீர்திருத்த அமைப்பு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த செமினி இடைத்தேர்தல் வேட்பாளர் விவாதமேடையை, பாரிசான் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்கள் நிராகரித்தது தொடர்பில், ‘பெர்சே’ தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வேட்பாளர்கள், செமினி தொகுதியில் தங்கள் தொலைநோக்குத் திட்டங்கள் என்னவென்பதை, வாக்காளர்களுக்குத் தெரிவிக்க, இந்த விவாத அரங்கைப் பயன்படுத்தி கொள்ளலாம் என பெர்சே தலைவர் தோமஸ் ஃபான் கூறினார்.

“இத்தகைய விவாதங்கள், மலேசியாவில் நாம் பார்க்க விரும்பும் நேர்மையான அரசியல் கலாச்சாரம் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பிரதிநிதிக்கும் இது ஒரு முன்நிபந்தனை, காரணம் அவர்கள் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற விவாதங்களில் ஈடுபட வேண்டும் அல்லவா,” என்று தோமஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

திட்டமிட்டப்படி, விவாத அரங்கம் நடைபெறுமா என்று கேட்டபோது, ஓரிருவர் மட்டும் கலந்துகொள்வதாக இருந்தால், அது நடப்பதற்கான சாத்தியம் இல்லை என்று சொன்னார்.