பாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல தரப்பினர் ஏற்கவில்லை

பகாங் மாநிலத்தில், பாக்சைட் சுரங்கத் தொழில் மற்றும் ஏற்றுமதி தடையுத்தரவைத் திரும்பப் பெறும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முடிவைப் பல தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில், ‘பெர்த்துபோஹான் அனாக் கெலாஹிரான் பஹாங்’ (பஹாங்கில் பிறந்த குழந்தைகள் சங்கம் – பிஏகேபி) அரசாங்கத்தின் இந்த முடிவை நிராகரித்ததோடு; நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு மற்றும் அதன் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோரைத், தடை உத்தரவை மீட்டெடுப்பதை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியது.

“பாக்சைட் தொழிற்துறை நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்பும் தரப்பினருடன், குறிப்பாக, அத்தொழிற்சாலைக்கு அருகிலுள்ள உள்ளூர் மக்களுடன், அரசாங்கம் இதுவரை எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை.

“பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், பாக்சைட் தொழில்துறை முதலாளிகளிடம் சேவியர் தலைவணங்கிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது,” என்று பிஏகேபி துணைத் தலைவர், ஹஸ்லிஹெல்மி டிஎம் ஜுல்ஹஸ்லி, இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிஏகேபி துணைத் தலைவர், ஹஸ்லிஹெல்மி டிஎம் ஜுல்ஹஸ்லி

அத்தாதுப்பொருள் சுரங்க நடவடிக்கைகளினால், கடுமையான சுற்றுச்சூழல் தாக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிஎன் அரசாங்கம் அதற்குத் தற்காலிக தடையுத்தரவை விடுத்தது என அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, மார்ச் 31-ல் முடிவடையவுள்ள, பாக்சைட் சுரங்க மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் தடையுத்தரவை, நீட்டிக்கப் போவதில்லை என சேவியர் அறிவித்தார்.

புதிய தரநிலை இயக்க நடைமுறை (எஸ்.ஓ.பி.) மற்றும் கடுமையான சட்ட அமலாக்கங்களுக்குப் பிறகு, அந்நடவடிக்கையைத் தொடரலாம் என அவர் மேலும் கூறியிருந்தார்.

சுற்றுச்சூழல் முன்பைப் போல் பாதிப்படையாமல் இருக்க, தாங்கள் இந்தத் தடையுத்தரவு நிறுத்தத்தை எதிர்ப்பதாக ஹஸ்லிஹெல்மி தெரிவித்தார்.

“இன்னும் சேமிப்பில் இருக்கும் பாக்சைட் கனிமப்பொருள், நீர் வளங்களைப் பாதித்துள்ளதோடு; சாலைகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளையும் சிவப்பு வண்ணத்திற்கு மாற்றியுள்ளது. மேலும் இது, சுற்றுச்சூழலை மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது,” என்றார் அவர்.

ஃபூஸியா சாலே

இதற்கிடையே, அமைச்சின் இந்தத் தீர்மானம், எஸ்.ஓ.பி. மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு (இஐஏ) ஆகியவற்றின் பொது அறிக்கைகளுடன் இணைக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும் எனக் குவாந்தான் எம்பியும், பிரதமர் துறை இலாகாவின் துணையமைச்சருமான ஃபூஸியா சாலே தெரிவித்தார்.

‘சஹாபாட் ஆலம் மலேசியா’ (மலேசிய சுற்றுச்சூழல் தோழர்கள் – எஸ்ஏஎம்) சுற்றுச்சூழல் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

எஸ் எம் முகமட் இட்ரிஸ்

சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974-ன் கீழ், சுற்றுச்சூழல் பாதிப்பு உட்பட, சுற்றுச்சூழல் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம்,  எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் (MESTECC) அமைச்சின் கீழ் அமைந்துள்ளது என அதன் தலைவர், எஸ்எம் முகமது இட்ரிஸ் கூறினார்.

உண்மையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாக்சைட் சுரங்கத் தொழில் தடுப்பு மசோதா, முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்ச வான் ஜுனாய்டி துவான்கு ஜாபாரால் செய்யப்பட்டது எனவும் அவர் சொன்னார்.

சுற்றுச்சூழல் பற்றிய கவலை இல்லாமல், பாதிக்கப்பட்ட அவ்வட்டார மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் பாக்சைட் தொழில்துறை பற்றி கலந்துபேசாமல், சேவியர் ஜெயக்குமார் இம்முடிவை எடுத்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது என்றும் முகமது இட்ரிஸ் கூறினார்.