செமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ – பி.எஸ்.எம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது

செமினி இடைத்தேர்தல் | செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது சுலபமான காரியமல்ல என்பதை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) உணர்ந்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் அல்லது பாரிசான் நேசனல் கூட்டணிகளுக்கே, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இருந்தபோதிலும், அந்தச் சிறியக் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சில முக்கிய நாட்டு நடப்புகளை, பிரச்சனைகளைப் பொது மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பிக்க வேண்டிய கடப்பாடு தங்களுக்கு இருப்பதாக பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் டி ஜெயக்குமார் தெரிவித்தார்.

சோசலிசக் கொள்கைக் கொண்ட ஒரு கட்சி, மலேசியர்களுக்கு நல்லது என்பதை விளக்கப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்றார் அவர்.

“99 விழுக்காடு மலேசியர்களுக்கு, பி.எஸ்.எம். கட்சியின் கொள்கை சிறந்தது, பயனானது. இதைதான் நாங்கள் மக்களிடம் விளக்கப்படுத்த வேண்டும்.

“இடைத்தேர்தலின் போது, ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன, சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, குறைந்தபட்ச சம்பளம், முதியோருக்கான நலனபிவிருத்தி திட்டங்கள் போன்ற எங்கள் கொள்கைகளை மக்களிடம் பரப்புரை செய்ய, இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு,” என சுங்கை சிப்புட் முன்னாள் எம்பியுமான அவர் சொன்னார்.

அதுமட்டுமின்றி, பொது மக்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் வாய்ப்பும் இதன் வழி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மக்களுக்கு உதவுவோம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்

கடந்த 14-வது பொதுத் தேர்தல் கணக்குப்படி, செமினியில் மொத்தம் 53,200 பதிவுபெற்ற வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில், 68 விழுக்காடு மலாய்க்காரர்கள், 17 விழுக்காடு சீனர்கள், 14 விழுக்காடு இந்தியர்கள், பிற இனத்தவர் மீதம். ஆனால், இந்த இடைத்தேர்தலுக்கு, 54,400 பதிவுபெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.

மலாய்க்காரர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அல்லது வேறு எந்த மதத்திற்கும், சோசலிசக் கொள்கைகள் முரண்பாடானவை அல்ல. முதலாளித்துவத்தின் பொருள்முதல்வாதக் கொள்கையைக் காட்டிலும், சோசலிசக் கொள்கைகள் மதத்துடன் இசைவானவை என அவர் தெரிவித்தார்.

“சோசலிசம் மனிதர்களுக்கு உதவ வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறது. சோசலிசக் கொள்கைகள் சமூகங்களை ஒழுங்குபடுத்தவும் நாட்டின் வளத்தை மிகவும் நியாயமான முறையில் பங்கிடவும் அனுமதிக்கிறது,” என்றார் அவர்.

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியுடன், பி.எஸ்.எம். தொடர்பு வைத்திருப்பதாக சிலர் நினைப்பது, கவலையை ஏற்படுத்துகிறது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

உண்மையில், பி.எஸ்.எம். ஆயுதம் ஏந்தி போராடும் ஒரு கட்சியல்ல, வெகுஜன இயக்கத்தின் மூலம், தேர்தல் அரசியல் வழி போராடும் ஒரு கட்சி என்று அவர் சொன்னார்.

“நாங்கள் பொதுமக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்கிறோம், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்கிறோம்,” என ஜெயக்குமார் விளக்கமளித்தார்.