சைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர் கலந்துகொள்ள மறுத்ததால், ஐமான் விவாதத்தை நிராகரித்தார்

செமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாட்டிலான இடைத்தேர்தல் விவாத மேடையில் கலந்துகொள்ள, பாரிசான் நேசனல் வேட்பாளர் ஜகாரியா ஹனாஃபி மறுத்ததால், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைலானியும் அதனை நிராகரித்தார்.

இதனைத் தெரிவித்த ஹராப்பான் இளைஞர் பிரிவு தலைவர் சைட் சட்டிக் சைட் அப்துல் ரஹ்மான், தேர்தல் விவாதமேடையில், முக்கிய வேட்பாளர்கள் கலத்துகொள்ளவில்லை என்றால், அது வெறும் உரையாக மாறிவிடும் என்றும் சொன்னார்.

“காரணம், ஆரம்பத்திலேயே, அம்னோ வேட்பாளர் கலந்துகொள்ள விரும்பவில்லை என, என்னிடம் கூறப்பட்டது, எனவே தேவை ஏற்பட்டால் கலந்துகொள்ளலாம், நாங்கள் நடப்பதைப் பார்த்துகொண்டுள்ளோம்,” என, இன்று செமினியில், பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் அணியுடனான சந்திப்பிற்குப் பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசினார்.

“ஐமானைப் பொறுத்தவரை, அவர் அதிகம் பேசமாட்டார், ஆனால் அதிகமாக சேவையாற்றுவார், இதனைச் செமினி வாழ் மக்களும் நன்கு அறிவர். அவரின் செயல்பாடுகளைப் பார்த்தால் தெரியும், இங்குள்ள பல என்.ஜி.ஓ.-களுக்கு அவர் அதிகம் உதவியுள்ளார். இதுதான் அவரின் பலம்,” என்றார் சட்டிக்.

பக்கத்தில் இருப்பவர்தான் பதிலளிக்கிறார்

செய்தியாளர்களின் கேள்விகளுக்குச் சரியான பதிலை அவர் அளிப்பதில்லை, பெரும்பாலும், ‘பக்கத்தில் இருப்பவர்கள்’ வேட்பாளரின் சார்பாக பேசுகின்றனரே, அது ஏன் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, “அவர் மக்களிடம் அணுகும் முறை, களத்தில் இறங்கி பணியாற்றுவது போன்றவற்றை வைத்து அவரை மதிப்பிடுங்கள்,” என சைட் சட்டிக் சொன்னார்.

கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, பிஎன் வேட்பாளர், ஜக்காரியா விவாதத்தில் கலந்துகொள்ள போவதில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து, ஹராப்பான் வேட்பாளர் ஐமானும் விவாதமேடையை நிராகரித்தார்.

சுயேட்சை வேட்பாளர் குவான் ச்சீ ஹேங் இன்னும் பதிலளிக்காத நிலையில், பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ் அஃபிக் அப்துல் மட்டுமே, பெர்சேவின் அழைப்பை ஏற்றுள்ளார்.