மங்கோலிய மாடல் அழகி அல்டான்துன்யாவைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட சிருல் அஸ்ஹார் உமரை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவருவது தொடர்பாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் விவாதிக்கப்படும் என்று துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
“மலேசியாவின் கட்டாய மரண தண்டனைச் சட்டத்தை மாற்றி அமைத்தால் அவரை(சிருலை) இங்குக் கொண்டுவர முடியும்”. சிருல் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரி செய்த விண்ணப்பத்தை ஆஸ்திரேலிய நீதிமன்றமொன்று திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது குறித்து கருத்துக் கேட்கப்பட்டதற்கு வான் அசிசா இவ்வாறு கூறினார்.
ஆஸ்திரேலிய சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர், சிருல்மீதான மரண தண்டனை அமல்படுத்தப்படாது என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டால் அவரை மலேசியாவிடம் ஒப்படைப்பதில் பிரச்னை இருக்காது என்றார்.
அடைக்கலம் கேட்டு சிருல் செய்திருந்த விண்ணப்பம் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய இணையச் செய்தித்தளங்கள் அறிவித்திருந்தன.