15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் எரிச்சலடைந்த இல்லத்தரசி

வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சுரைடா கமருடின், இன்று வீடு வாங்குவோருக்கு உதவும் அரசாங்கத்தின் FundMyHome-DepositKu திட்டத்தைத் தொடக்கிவைத்து விட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இடையில் புகுந்த ஒரு குடும்பத் தலைவி அமைச்சரின் கவனத்தை ஈர்த்தார்.

ஹபிசா அப்துல் ரஹ்மான்,34, வீட்டுக் கடனுக்காக 15க்கு மேற்பட்ட தடவை விண்ணப்பம் செய்து விட்டதாகவும் ஆனால், தன் விண்ணப்பம் எப்போதுமே நிராகரிக்கப்படுவதாகவும் அமைச்சரிடம் கண்ணீர் மல்க முறையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களையும் சந்தித்து தன் சோகக் கதையைத் தெரிவித்தார்.

“நாங்கள் வாங்க விரும்புவது ரிம100,000- த்துக்கும் குறைவான விலை வீடு. எங்களால் முன்பணம் ரிம20,000 கொடுக்க முடியும்.

“ஏன் எங்களை இப்படி நடத்துகிறார்கள்? நாங்கள் சாமானிய மக்கள். ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்க நினைக்கிறோம். இதுவரை வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்”, என்றார்.

கணவரின் மாத வருமானம் ரிம3,000 என்பதால் தாங்கள் பி40 தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய அபிசா, கடன் பெறும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் ஆனால், அது மறுக்கப்படுவதாகவும் கூறினார்.

பக்கத்தான் அரசாங்கம் FundMyHome-DepositKu திட்டத்தைத் தொடங்கியிருப்பதை அவர் வரவேற்றார். விரைவில் அத்திட்டத்தில் பதிந்துகொள்ளப் போவதாகவும் அவர் சொன்னார்.

முதல் தடவை வீடு வாங்குவோருக்கு உதவியாக FundMyHome திட்டத்தைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கடந்த ஆண்டு தொடக்கி வைத்தார்.

-பெர்னாமா