ஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை கொடுத்தது அம்னோ – சரவாக் ரிப்போர்ட்

14வது பொதுத் தேர்தலில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு அதிகமான இடங்களில் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர்களுக்குப் பண உதவி செய்தது அம்னோவாம். சரவாக் ரிப்போர்ட் கூறுகிறது.

அப்போது அம்னோ பொருளாளராக இருந்த சாலே சைட் கெருவாக் பாஸின் பேங்க் இஸ்லாம் கணக்கில் ரிம2.5 மில்லியனை ரொக்கமாக போட்டார் என சரவாக் ரிபோர்ட் அதன் இணையத் தளத்தில் கூறியது.

“பாஸுக்குக் கொடுக்கப்பட்ட இப்பணம், பாஸ் வேட்பாளர்களின் தேர்தல் வைப்புத் தொகை கொடுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் சரவாக் ரிப்போர்ட்டுக்குக் கிடைத்துள்ளன. அதன் பின்னர், அதேபோல் மேலும் ஒரு மில்லியன் ரிங்கிட் அம்னோவால் பாஸின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது”, என்று அது கூறிற்று.

இதற்கான ஆதாரங்களை சரவாக் ரிப்போர்ட், லண்டன் நீதிமன்றத்தில், பாஸ் தலைவர் அப்துல் ஹாவி ஆவாங் தனக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் சமர்ப்பிக்க விருந்ததாக சரவாக் ரிப்போர்ட் தெரிவித்தது.

ஆனால், பாஸ் செலவைக் கருத்தில்கொண்டு, அவ்வழக்கைத் தொடர விரும்பவில்லை.

14வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியைத் தன் பக்கம் இழுக்க அம்னோ ரிம90 மில்லியனை அக்கட்சிக்குக் கொடுத்ததாக சரவாக் ரிப்போர்ட் கூறியிருந்தது

கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் 155 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட்டது. இது ஒரு சாதனை. ஏனென்றால் நம் நாட்டு வரலாற்றில் இதுவரை எந்தவொரு கட்சியும் இத்தனை இடங்களில்   போட்டியிட்டது  இல்லை.