செமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாடு செய்திருக்கும் விவாத அரங்கம், மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது, மாறாக வேட்பாளர்களைப் புகழடைய செய்வதே அதன் நோக்கம் என பிஎன் வேட்பாளர் ஜக்காரியா ஹனாஃபி கூறியுள்ளார்.
மக்களை அணுகி, அவர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த விரும்பியதால், அந்த விவாத அரங்கிற்கான அழைப்பைத் தான் மறுத்ததாக அவர் கூறினார்.
“மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். விவாதம் செய்வது என் சொந்தப் பிரச்சனை, நானும் அவரும்தான் (ஹராப்பான் வேட்பாளர்) இதனால் புகழடைவோம்.
“நான் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன், விவாதம் செய்வதற்கு அல்ல. விவாதத்திற்கான சான்றிதழ் வேண்டுமென்றால், என்னிடம் நிறைய உள்ளது,” என இன்று காலை, செய்தியாளர்கள் சந்தித்தபோது கூறினார்.
நேற்று, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைலானியும் அந்த விவாத மேடையைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.