செமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து செய்தது

செமினி இடைத்தேர்தல் | பிப்ரவரி 25-ம் தேதி, நடத்த திட்டமிடப்பட்ட செமினி இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தைப் பெர்சே இரத்து செய்துள்ளது.

தேர்தல் கண்காணிப்புக் குழுவான ‘பெர்சே’, பி.என் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் அதில் பங்கேற்க இணக்கம் தெரிவிக்காததால், விவாத மேடை இரத்து செய்யப்படுவதாக, இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

“பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ் அஃபிக் அப்துல் மற்றும் சுயேட்சை வேட்பாளர் குவான் ச்சீ ஹேங் இருவரும் சம்மதம் தெரிவித்த வேளையில், பிஎன் வேட்பாளர் ஜக்காரியா ஹனாஃபியும் ஹராப்பான் வேட்பாளர் ஐமான் ஜைலானியும் எங்கள் அழைப்பை நிராகரித்துவிட்டனர்.

“நாட்டில், இரண்டு பிரதான கூட்டணிகளின் வேட்பாளர்கள் பங்குகொள்ளாமல், தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படவிருக்கும் இந்த விவாதத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என்பதால், விவாதத்தை இரத்து செய்ய நாங்கள் முடிவு செய்தோம்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்த நிக் அஸிஸ் மற்றும் குவான் இருவருக்கும் நன்றி தெரிவித்த வேளையில், பிஎன் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு பெர்சே தனது ஏமாற்றத்தைத் தெரிவித்துக்கொண்டது.

“விவாதத்தில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ள அவர்கள், செமினி மக்களின் பிரதிநிதிகளாகப் பொறுப்பு வகிக்க தகுதியானவர்கள்தானா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது. மாநிலச் சபையில், இவர்கள் எப்படி தங்கள் தொகுதி மக்களின் பிரச்சனை குறித்து விவாதம் செய்வர்?”

மக்கள் பிரதிநிதிகளாக விரும்புபவர்கள், தைரியமாக விவாதம் செய்பவர்களாக, தங்கள் கருத்தை முன்வைப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என பெர்சே கூறியது.

“ஐமான் மற்றும் ஜக்காரியா இருவரும் கோழைகள் அல்லது விவாதத் திறன் அற்றவர்கள் என்று பெர்சே கூறவில்லை, ஆனால் செமினி வாக்காளர்களில் பலருக்கு, ‘செராமா’க்களுக்குச் சென்று, தங்கள் வேட்பாளர்களை மதிப்பிடக்கூடிய வசதி கிடைக்காமல் இருக்கலாம், ஆக அவர்களுக்கு இந்த விவாதம் ஒரு வாய்ப்பாக அமையும்.

“வேட்பாளர்கள் இந்த விவாதத்தில் கலந்துகொள்வதன் மூலம், ஆயிரக்கணக்கான செமினி வாக்காளர்கள் மட்டுமின்றி, குறைந்தது 1 மில்லியன் மலேசியர்களிடம் பேசும் வாய்ப்பைப் பெறுவர்,” என்று கூறிய பெர்சே, கேமரன் மலை இடைத்தேர்தல் விவாதத்தைக் கிட்டதட்ட 750,000 பேர், டிவி 1-ல் பார்த்ததாகத் தெரிவித்தது.

ஹராப்பான் வேட்பாளர் ஐமான் கூறியுள்ள காரணம், பி.எஸ்.எம். மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை அவமதிப்பதுபோல் உள்ளது என்றும் பெர்சே கூறியுள்ளது.

“ஆளும் கூட்டணியாக வீற்றிருக்கும் ஹராப்பான், சரியானவற்றிற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டுமே ஒழிய, பிஎன் நடவடிக்கையை அனுமதிப்பதோ அல்லது பின்பற்றுவதோ அதன் செயல்பாடாக இருக்கக்கூடாது.

விவாதம் இம்முறை இரத்து செய்யப்பட்டாலும், அடுத்தடுத்த தேர்தல்களில், குறிப்பாக, ரந்தாவ் இடைத்தேர்தலில், மீண்டும் ஏற்பாடு செய்யப்படும் என பெர்சே கூறியுள்ளது.