வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் இரத்து, பி.எஸ்.எம். ஏமாற்றம்

செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இடையிலான விவாதத்தை, இரத்து செய்த பெர்சேவின் முடிவில் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) தனது ஏமாற்றத்தைத் தெரிவித்தது. இது மற்ற வேட்பாளர்கள் தங்களது கருத்துகளை வெளிபடுத்தும் வாய்ப்பைக் கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அது கூறியுள்ளது.

தேசிய முன்னணி (பிஎன்) மற்றும் நம்பிக்கைக் கூட்டணி (பிஎச்) வேட்பாளர்கள் பங்கேற்க மறுத்துவிட்டதால், பெர்சே இந்த முடிவை எடுத்ததாகக் கூறுவது அதைவிட மிகவும் துரதிர்ஷ்டமானது என்று பி.எஸ்.எம். பிரச்சார இயக்குநர், எஸ் அருட்செல்வன் கூறினார்.

“பிஎன் மற்றும் பிஎச் வேட்பாளர்கள் பங்கேற்க மறுத்துவிட்டார்கள் என்பதற்காக, விவாதத்தை ஏன் இரத்து செய்ய வேண்டும், மற்ற இரு வேட்பாளர்களும் – பி.எஸ்.எம். & சுயேட்சை வேட்பாளர் – விவாதத்திற்குத் தயாராக இருக்கும் போது?

“இந்த முடிவானது, விவாதத்தை நடத்த வேண்டுமா, இல்லையா என்பதை, ஒரு பெரிய மற்றும் சக்தி வாய்ந்த கட்சி தீர்மானிப்பதுபோல் உள்ளது.

“அடிப்படையில், அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சம வாய்ப்பை வழங்குவதோடு, ஒவ்வொரு வேட்பாளரின் செயல்திறனையும், நெருக்கமாகவும் நியாயமான முறையிலும் மக்கள் மதிப்பீடு செய்ய இந்த விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது.

“ஒரு பெரிய இலக்குக் குழுவிடம், தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க, இந்த விவாதம், சிறிய கட்சிக்கும் சுயேட்சை வேட்பாளருக்கும் ஒரு தளத்தை அமைத்து கொடுத்தது,” என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

நேற்று, பிஎன் வேட்பாளர், ஜக்காரியா ஹனாஃபி, பெர்சே ஏற்பாடு செய்துள்ள இந்த விவாதம் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது எனக் கூறி, அதில் பங்கெடுக்கப் போவதில்லை என்றார்.

பிஎச் வேட்பாளர், முகமட் ஐமான் ஜைலானி, பிஎன் வேட்பாளர் கலந்துகொள்ளாததால், தானும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார்.

இதற்கிடையே, தங்கள் கருத்துகளைத் தைரியமாக வெளிபடுத்த, சம்மதம் தெரிவித்த தரப்பினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், பெர்சே தனது நிகழ்ச்சியைத் தொடர வேண்டும் என அருட்செல்வன் கேட்டுக்கொண்டார்.

திட்டமிட்டப்படி இந்த விவாத நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றால், கலந்துகொள்ள மறுத்த தரப்பினருக்கு அது வெற்றியாகவே அமையும் என்றும் அவர் சொன்னார்.

“மறுப்பு தெரிவித்த பிஎன், பிஎச் வேட்பாளர்கள், செமினி மக்கள் பிரச்சனைகளுக்கு, சிலாங்கூர் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க இன்னும் தயாராகவில்லை என்பதையேக் காட்டுகிறது.

“இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள, தனது வேட்பாளரைத் தயார்படுத்தாத பிஎச் தலைமைத்துவத்தின் மீதும் பி.எஸ்.எம். ஏமாற்றமடைந்துள்ளது.

“விவாதத்தில் கலந்துகொள்ள மறுத்ததன் மூலம், இனி எதிர்காலத்தில், எந்தவொரு பிரச்சினையிலும் அவர்களுடன் விவாதிக்க விரும்பாத எந்தவொரு எதிர்க்கட்சிக்குக்  கண்டனம் தெரிவிக்கவோ அல்லது கிண்டலடித்துப் பேசவோ ஹராப்பானுக்குத் தகுதி இல்லை,” என்றும் அவர் கூறினார்.