ஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி மன்றம் அனுமதி மறுப்பு

அனைத்துலக இஸ்லாமிய பிரச்சாரக் கழகம்(ஐபிஎஸ்ஐ), சர்ச்சைக்குரிய சமயப் பேச்சாளர் ஜாகிர் நாய்க்கின் சொற்பொழிவை பினாங்கு சிட்டி ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி கேட்டு செய்திருந்த விண்ணப்பத்தை பினாங்கு நகராட்சி மன்றம்(எம்பிபிபி) நிராகரித்தது.

ஐபிஎஸ்ஐ-இன் விண்ணப்பத்தைப் “பரிசீலனை செய்வதற்கில்லை” என எம்பிபிபியின் சமூகச் சேவை இயக்குனர் ரஷிடா ஜலாலுடின் பிப்ரவரி 13 தேதியிடப்பட்ட ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜாகிர் நாய்க்கின் நிகழ்வை ஜூ14 இரவு மணி 8-இலிருந்து 11வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

பினாங்கு மாநில இஸ்லாமிய சமய மன்ற (எம்ஏஐஎன்பிபி) அதிகாரி ஒருவர், ஒரு வேளை குறிப்பிட்ட நாளில் அந்த இடம் ஏற்கனவே வேறொரு நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

“சிட்டி ஸ்டேடியம் அண்மையில்தான் தரம் உயர்த்தப்பட்டு நிறைய விளையாட்டுகள் நடந்து வருகின்றன. அதனால்தான் செராமா நடத்துவதற்கு இடம் கிடைக்கவில்லை போலும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பினாங்கில் ஜாகிர் பொது இடங்களில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டதற்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்றும் சொன்னார்.