செனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர் தரப்பு வலியுறுத்து

கூட்டரசுப் பிரதேச பிகேஆர் இளைஞர் பிரிவு, செனட்டர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களைக் குறிப்பாக டேவான் நெகரா(மேலவை) சீரமைப்புக் குழுவில் உள்ளவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இளைஞர்களின் குரல்களும் மேலவையில் ஒலிக்க அப்படி ஒரு திருத்தம் தேவை என இளைஞர் பிரிவு தொகுதித் தலைவர் நயிம் புருண்டாஜ் கூறினார்.

நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் வயதை (18ஆக)க் குறைப்பதற்கு வகைசெய்யும் தீர்மானமொன்று கொண்டுவரப்பட விருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“டேவான் நெகரா எல்லா மலேசியர்களுக்காகவும்தான் சட்டமியற்றுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக மட்டும் அல்ல”, என்றாரவர்.

30வயதுக்குக் குறைவான ஒருவர் அமைச்சராக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு. அவருக்கு வயது 26.