கியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை ஒன்றும் அதிகமில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பொதுச் சேவை ஊழியர் எண்ணிக்கை மிக அதிகம் என்று குறிப்பிட்டதற்குப் பதிலளித்த அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸ், மலேசிய மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அரசுப் பணியாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்று கூறியது.

“மகாதிர் அவர், 2003-இல் அரசாங்கத்தைவிட்டு விலகியபோது ஒரு மில்லியன் அரசு ஊழியர்கள்தான் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அப்போது மலேசியாவின் மக்கள் தொகை 16 மில்லியன்தான். இப்போது 32 மில்லியனாக அதிகரித்துள்ளது.

“கடந்த 16 ஆண்டுகளில் பெருகி வரும் மக்கள்தொகைக்குப் பணியாற்ற நிறைய பள்ளிகள், மருத்துவமனைகள், போலீஸ் நிலையங்கள், இராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. கியுபெக்ஸைப் பொருத்தவரை 1.7 மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை பெரிதாகத் தெரியவில்லை”, என்று கியுபெக்ஸ் தலைவர் அசே மூடா தெரிவித்ததாக சினார் ஹரியான் கூறியுள்ளது.

அசே 2003-இல் மலேசிய மக்கள்தொகை 16 மில்லியன் என்று கூறினாலும் உலக வங்கி புள்ளிவிவரங்கள் அப்போதைய மலேசிய மக்கள்தொகை 24மில்லியனுக்குமேல் என்று கூறுகின்றன.