நிதி அமைச்சர் : நாட்டின் கடன் இன்னும் RM1 டிரில்லியன் இருக்கிறது

கடந்த 2018 இறுதி நிலவரப்படி, நாட்டின் கடன் RM1 டிரில்லியன் ரிங்கிட்டில் உள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார்.

RM1.087 டிரில்லியனில் இருந்த முந்தையக் கடனை, தற்போதைய அரசாங்கம்  குறைத்துள்ளது என்று அவர் கூறினார்.

“நாங்கள் கடனை வெற்றிகரமாகக் குறைத்துள்ளோம்…. ஆனால், அது இன்னும் டிரில்லியனிலேயே உள்ளது,” என இன்று, கோலாலம்பூரில் உள்ள யூஓபி கோபுரத்தில் அமைந்துள்ள பிராசரானா மலேசிய பெர்ஹாட் தலைமையகத்தில், எல்.ஆர்.டி.3 திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப் பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் லிம் சொன்னார்.

1எம்டிபி – அரசாங்கம் உத்தரவாதம் கொடுத்ததன் அடிப்படையில், அதனைத் திருப்பி செலுத்த வேண்டியக் கடப்பாடு இருக்கிறது – கடனை முகான்மைக் கடனாக உதாரணம் கூறி, லிம் இதனை தெரிவித்தார்.

கடந்தாண்டு, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், நாட்டின் கடன் RM1 டிரில்லியனைத் தாண்டியுள்ளது என அறிவித்தது. இது முந்தைய RM300 பில்லியன் கடனைக் காட்டிலும் மிக அதிகம்.

நாட்டின் நிர்வாகத்தைக் கையிலெடுத்த சில நாட்களிலேயே, பிரதமர் டாக்டர் மகாதிர் இந்த அறிவிப்பைச் செய்தார். முந்தைய பிஎன் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களை விட, இந்தக் கணக்கு அதிகமாக இருந்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

2017 செப்டம்பரில், அப்போதைய நிதியமைச்சு அறிவித்த கடன் வெறும் RM687.43 பில்லியன் மட்டுமே.