இந்திராவின் மகள் 11 வருடங்களாகப் பள்ளிக்குப் போகவில்லை

‘இந்திரா காந்தி எக்‌ஷன் டீம்’ (இங்காட்) என, தங்களை அடையாளப்படுத்தி கொண்ட ஓர் அரசு சாரா அமைப்பு, நாளை, பெட்டாலிங் ஜெயாவில், ஓர் ‘அதிர்ச்சி தரும் செய்தி’யைப் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியிடப்போவதாகக் கூறியுள்ளது.

இதுபற்றி மலேசியாகினியிடம் பேசிய, அதன் தலைவர் அருண் துரைசாமி, அவற்றுள் ஒன்று, காணாமல் போன இந்திராகாந்தியின் மகள், பிரசன்னா டிக்‌ஷா பற்றியது என்றார்.

“எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் படி, இந்த 11 ஆண்டுகளில், பிரசன்னா ஒருநாள்கூட பள்ளிக்குச் சென்றதில்லை.

“அவர் உயிருடன் இருக்கிறாரா என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லை,” என்றார் அவர்.

இருப்பினும், அதுபற்றி அதிகம் பேசவிரும்பாத அருண், நாளை, செய்தியாளர் சந்திப்பின் போது, இன்னும் அதிகமான தகவல்களை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.

பிரசன்னா குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை முஹம்மது ரிட்டுவான் அப்துல்லா, ஒருதலைப்பட்சமாக பிரசன்னாவையும் அவரது இரு உடன்பிறப்புகளையும், 2009-ம் ஆண்டில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிட்டார்.

அதன்பிறகு, நீதிமன்றத்தில் நடந்த நீண்டதொரு வழக்கு விசாரணையில், 2014-ம் ஆண்டு, உயர்நீதிமன்றம் ரிட்டுவானைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது.

இருப்பினும், இன்றுவரை, காவல்துறையினரால் ரிட்டுவானைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்தாண்டு நவம்பரில், இந்திரா தனது மகளின் நிலை அறிய விரும்புவதாகக் கூறி, காவல்துறை தலைவர் முகமட் ஃபூஸிக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கும் ஒரு திறந்த கடிதத்தை எழுதினார்.

இன்று வெளியிட்ட செய்தியாளர் அழைப்புக் கடிதத்தில், ‘இங்காட்’ அமைப்பில், மலேசிய இந்து சங்கம், இந்து கொன்வென்ஷன் எக்‌ஷன் டீம் மற்றும் மலேசிய இந்து ஆகம அணி ஆகியவை உறுப்பியம் பெற்றுள்ளதாக அருண் தெரிவித்தார்.