இந்திராவின் முன்னாள் கணவரைக் கண்டுபிடிப்பவருக்கு RM10,000 பரிசு

இந்திராகாந்தியின் கணவர், முகமட் ரிட்டுவான் அப்துல்லா பற்றிய தகவல்களைக் கொடுப்பவர்களுக்கு, ‘இந்திரா காந்தி எக்‌ஷன் டீம்’ (இங்காட்) RM10,000 பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளது.

2009-ல், தனது 11 மாதக் குழந்தை, பிரசன்னா டிக்‌ஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறிய ரிட்டுவானை, காவல்துறையினராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருதலைப்பட்சமாக, தனது 3 பிள்ளைகளையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய ரிட்டுவானைக் கண்டுபிடிக்க, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த RM10,000 வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, பெட்டாலிங் ஜெயாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘இங்காட்’ தலைவர் அருண் துரைசாமி இதனைத் தெரிவித்தார்.

பிரசன்னாவின் உடன்பிறந்தோர் இருவரும், தற்போது தாயார் இந்திராகாந்தியிடம் இருக்கின்றனர், ஆனால் பிரசன்னா எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை.

கூட்டரசு நீதிமன்றம், கடந்தாண்டு ஜனவரியில், ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்டது சட்டப்படி குற்றம் என தீர்ப்பளித்தது.

செய்தியாளர்களிடம் பேசிய இந்திரா, இந்த முயற்சியில் வெற்றி கிட்டும் என்று நம்புவதாகச் சொன்னார்.

“அவர் (பிரசன்னா) துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என வதந்திகள் வருகின்றன. தாயார் பக்கத்தில் இல்லாமல், அவரது நிலையைக் கற்பனை செய்துபாருங்கள், விரைவில் அவருக்கு 12 வயதாக உள்ளது, பல கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தல் வழக்குகளை நாம் இப்போது பார்க்கிறோம், எல்லாப் பிரச்சனைகளும் விரைவில் முடிவடையும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

“ரிட்டுவானைக் கண்டுபிடிக்க, ஒரு சிறப்புக் குழுவை உருவாக்கும்படி நான் காவல்துறையிடம் கேட்டிருக்கிறேன்.

“நாங்கள் போதிய அவகாசம் கொடுத்துவிட்டோம், ஆனால் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இனி, நீதிமன்ற தீர்பை அவமதித்துவிட்டார் என, ஐஜிபி மீது வழக்கு தொடர்வதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,” என இந்திரா கூறினார்.

ரிட்டுவான், இந்திரா இடையிலான வழக்கு விசாரணை, ஷரியா மற்றும் சிவில் நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நடந்தது.

2014-ம் ஆண்டு. ரிட்டுவானைக் கைது செய்யும்படி, உயர்நீதிமன்றம் கைதாணை வெளியிட்டது, ஆனால் இதுவரை காவல்துறையினர் ரிட்டுவானைக் கைது செய்யவில்லை.

“ரிட்டுவான், தென் தாய்லாந்தில் வசிப்பதாக சில தகவல்கள் வந்துள்ளன, ஆனால் எங்களால் அதனை உறுதி செய்ய முடியவில்லை,” என அருண் தெரிவித்தார்.

“காவல்துறைதான் இதனை உறுதி செய்யவேண்டும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனில், அது அப்பெண் குழந்தைக்கு (பிரச்சன்ன) அவர்கள் இழைக்கும் தீங்காகும்,” என அவர் மேலும் சொன்னார்.