இனவாதத்தைத் தூவுகிறார் நஸ்ரி

செமிஞ்யே தேர்தல்| பக்கத்தான் ஹரப்பான் பலவீனமாக இருக்கிறது அதனால்தான் அது மலாய் உரிமைகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கின்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ்.

மலாய்க்காரர்- அல்லாதார் தலைமை நீதிபதியாகவும் சட்டத்துறை தலைவராகவும் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருப்பது இதைத்தான் காண்பிக்கிறது என நஸ்ரி நேற்றிரவு பெரானாங்கில் ஒரு செராமாவில் உரை நிகழ்த்தியபோது கூறினார்.

“(மலாய்க்காரர்) சலுகைகளைக் காப்பது ஒவ்வொரு பிரதமரின் கடமையாகும். ஆனால், அரசாங்கம் பலவீனமாக உள்ளது.

“முன்பு நடக்காதவை எல்லாம் இப்போது நடக்கிறது. சட்டத்துறைத் தலைவர், தலைமை நீதிபதி, நிதி அமைச்சரைப் பாருங்கள்.

“முன்பு நினைத்துக்கூட பாரக்க முடியாதவை எல்லாம் நடக்கின்றன. சிலர் கூறுவதுபோல் நாம் நம் உரிமைகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து வருகிறோம்”, என 80-பேரடங்கிய கூட்டத்தில் நஸ்ரி கூறினார்.

தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் மரணமுற்ற சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

“அடிப்பைத் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஆள்களுக்கு எதிராக ஏன் குற்றம் சாட்டப்படவில்லை என்று கேட்கிறோம்.

“சட்டத்துறைத் தலைவரும் சந்தேகப் பேர்வழிகளும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, சட்டத்துறைத் தலைவர் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்று நினைப்பதற்காக மலாய்க்காரர்களைக் குறை கூறாதீர்கள்.

“என்ன பிரச்னை? அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டியதுதானே. அவர்கள்மீதான வழக்கு மீட்டுக்கொள்ளப் பட்டதாக அறிகிறேன்.

“இது மலாய்க்காரரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அப்பதவில் உள்ள மலாய்க்காரர்- அல்லாத ஒருவர் நியாயமாக நடப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை”, என்றார்.

மலாய்க்காரர்- அல்லாதாருக்கான சலுகைகள்

மலாய்க்காரர் சலுகைகள் பற்றிக் கேள்வி எழுப்பும் மலாய்க்காரர்- அல்லாதார், மலாய்- அல்லாதாருக்கும் சலுகைகள் இருப்பதை மறந்து விடக்கூடாது என்று நஸ்ரி குறிப்பிட்டார்.

“சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும்கூட சலுகைகள் உண்டு. என்ன சலுகைகள்? தாய்மொழிப் பள்ளிகள் இருப்பது ஒரு சலுகை”, என்றாரவர்.

“மற்ற நாடுகள் தாய்மொழிப் பள்ளிகளை அனுமதிப்பதில்லை.

“மலாய்க்கார் உரிமைகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் போராடினால் சீன, தமிழ்ப் பள்ளிகள் இருக்கக் கூடாது என்று நான் போராடுவேன்”, என்று நஸ்ரி கூறினார்.