செமினி இடைத்தேர்தல் | நேற்றிரவு, 100 மீட்டர் இடைவெளியில் நடைபெறவிருந்த இரு ‘செராமா’க்களை – மசீச மற்றும் டிஏபி – போலிஸ் தடுத்து நிறுத்தியது. விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, அம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) ஆதரவாளர்கள் சிலர், செமினி உணவுக் கடைகளுக்கு அருகில், அந்த செராமா ஏற்பாடாகி இருந்து தொடர்பில், திருப்தி கொள்ளவில்லை என்று தெரிகிறது.
பிஎன் சார்பாக பேசிய மசீச தீ செங் செய்ன், கூலாய் எம்பி, தியோ நீ சிங்-ஐ, சீனக் கல்வி தொடர்பில் சவால்விட்டு பேசியதைத் தொடர்ந்து, பிஎச் ஆதரவாளர்கள் பிஎன் கூடாரத்தை நோக்கி நகர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட போலிசார், அவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, உடனடியாக மேடையில் ஏறி, செராமா’வை நிறுத்த சொல்லி, தீ-இடம் கூறியதாகத் தெரிகிறது.
அதனைத்தொடர்ந்து, டிஏபி மேடைக்குச் சென்று, பேசுவதை நிறுத்தச்சொல்லி அவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது, பொது மக்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, மசீச தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பிஎன் மற்றும் பிஎச் இருதரப்பினரும், நேற்றைய செராமாவுக்கு முறைப்படி விண்ணப்பித்து பெர்மிட் பெற்றுள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத, தேர்தல் ஆணைய அதிகாரி கூறினார்.
இருப்பினும், போலிசாரின் பாதுகாப்பிற்கு விண்ணப்பித்தது ஏன் என்று தெரியவில்லை என்று அவர் சொன்னார்.
நேற்றைய செராமாவில், டிஏபி சார்பில், துணைக் கல்வி அமைச்சரோடு, டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கும் பேசவிருந்தார்.