ஒரு காலத்தில் பிரதமர் மகாதிரின் பரம வைரியாக விளங்கிய அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, தம் பகையாளி நலமே வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்.
“நான் இதைக் கேலியாகக் குறிப்பிடவில்லை. அவர் நல்லா இருக்க வேண்டுமென்று மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
“இப்போதைய நிலையில் மகாதிருக்கு எதுவும் ஆனால், நாட்டில் குழப்பம் தலைதூக்கும்”. நேற்றிரவு புக்கிட் மக்கோடாவில் செமிஞ்யே வாக்காளரிடையே தெங்கு ரசாலி பேசினார்.
மகாதிரைக் கட்டாயப்படுத்திப் பதவி விலகச் செய்தால் கொந்தளிப்பு ஏற்படும்.
“பிகேஆரில் சலசலப்புகள், முக்கியமான அமைச்சுகள் டிஏபி வசமிருப்பதால் பக்கத்தான் எதிர்நோக்கும் பிரச்னைகள்- இந்த நிலையில் என்ன நடக்கும், எண்ணிப் பாருங்கள்”, என்றாரவர்.
இதற்குமுன்னர் பாஸ் தலைவர்கள் மகாதிருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எச்சரித்திருந்தனர்.
அப்படி எதுவும் நடக்காது என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மறுத்தார்கள். மகாதிரும், தாம் ஆட்சியில் இருக்க பாஸின் ஆதரவு தேவையில்லை என்று கூறியிருந்தார்.
மகாதிரின் அமைச்சரவையில் ஹரப்பானின் இரண்டாவது பெரிய கட்சியான டிஏபிக்கு ஆறு அமைச்சர் பதவிகள், பிகேஆருக்கு 7 பெர்சத்துவுக்கும் அமனாவுக்கும் தலா ஐந்து.