ஏஜி ஆவதற்கு இனம் முக்கியம் அல்ல, சட்ட நுணுக்கம் தெரிந்தவரா என்பதுதான் முக்கியம்- கேமரன் எம்பி

சட்டத்துறைத் தலைவர் போன்ற அரசாங்க உயர்ப் பதவிகளுக்கு ஆள்களை நியமுக்கும்போது இனம் பார்த்து நியமிக்க வேண்டிய அவசியமில்லை என கேமரன் மலை எம்பி ரம்லி முகம்மட் நூர் கூறினார்.

இனத்தைப் பார்க்கக் கூடாது, நியமனம் செய்யப்படுபவருக்குத் தகுதி இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் என்றாரவர்.

“என்னைக் கேட்டால் சட்டத்துறைத் தலைவராக அமர்த்தப்படுபவர் ஷரியா சட்டம் உள்பட சட்டத்தில் வல்லுனராக இருத்தல் வேண்டும்.

“இனம், நிறம் அவசியமில்லை. அவர் சட்ட விவகாரங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுபவர் என்பதால் சட்ட நிபுணத்துவம் பெற்றவராக இருப்பதுதான் முக்கியம்”, என ரம்லி நேற்றிரவு செம்ஞ்யேயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசீஸ், சட்டத்துறைத் தலைவர், நிதி அமைச்சர் போன்றவர்கள் முஸ்லிகளாக இருப்பது அவசியம் என்று கூறியிருந்தது குறித்துக் கருத்துரைத்தபோது கேமரன் மலை எம்பி அவ்வாறு கூறினார்.