குறைந்தபட்ச சம்பளம் ரிம1,110 என்பது ‘மிக அதிகமா’? அமைச்சருக்கு எம்டியுசி கண்டனம்

மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், குறைந்தபட்ச சம்பளமான ரிம1,110 கொடுப்பது சில தரப்பினருக்குச் சிரமமாக இருக்கலாம் என்று கூறியிருப்பது கண்டு மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் பினாங்கு பிரிவு அதிர்ச்சி அடைந்துள்ளது.

குலசேகரன் நேற்று மலேசிய முதலாளிமார் சம்மேளத்தின் சாபா கிளையினரைச் சந்தித்தபின்னர் இவ்வாறு கூறினார் என ஃப்ரி மலேசியா டூடே கூறியது.

குறைந்தபட்ச சம்பளத்தை ரிம920- இலிருந்து ரிம1,110 ஆக உயர்த்தியது குறித்து சாபா முதலாளிமார்கள் சிலர் குறைப்பட்டுக் கொண்டார்கள் என அமைச்சர் கூறியதாக ஊடகச் செய்திகள் கூறின.

அதனைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் “நடைமுறைக்கு ஏற்ற” ஒரு குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை வகுக்கும் என்றவர் கூறியிருந்தார்.

பினாங்கு எம்டியுசி செயலாளர் கே.வீரையா, பக்கத்தான் ஹரப்பான் குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 ஆக உயர்த்தப்படும் என்று ஹரப்பான் அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தினார்.

“அமைச்சர் ஒரு வேளை மறந்திருந்தால் அவருக்கு நினைவுறுத்த விரும்புகிறோம்- ஹரப்பான் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 அளவுக்கு உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது”, என வீரையா நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

“மலேசியத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை ஈடு செய்யக்கூடிய சம்பளம் கிடைப்பதில்லை என்ற மறுக்கமுடியாத உண்மையை அமைச்சருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

“அதேபோல் நாட்டின் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தைவிட அவர்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப ஒரு சம்பளம் கொடுப்பதே மேலானது என்று கூறும் பேங்க் நெகாரா அறிக்கையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்”, என்றாரவர்.