இசி : பரிசு கூடைகள் வழங்குதல், வீடுகள் பழுது பார்த்தல், சட்டபடி தவறாகும்

செமினி இடைத்தேர்தல் | இடைத்தேர்தலின் போது, சம்பந்தப்பட்ட தொகுதியில் பரிசு கூடைகள் வழங்குதல், வீடுகள் பழுது பார்த்தல் போன்றவை, தேர்தல் விதிமுறைகளின் படி தவறு எனத் தேர்தல் ஆணையம் (இசி) தெரிவித்துள்ளது.

இசி தலைவர், அஸார் அஸிஸான் ஹருண், இதுபோன்ற குற்றங்கள் தொடர்பில், புகார்கள் பெற்றுள்ளதாகவும், மேலும் ஏதாவது தவறுகள் நடக்கும் போது உடனடியாக இசி மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) முறையாக, முழுமையான தகவல்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“இசிக்குத் தேர்தலை முறையாக நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. தேர்தல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எம்ஏசிசி-இடம்தான் உள்ளது,” என இன்று காலை, செமினி, கேம் பட்டாலியன் 4-இல், முதற்கட்ட வாக்களிப்பு செயற்முறையைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

பிப்ரவரி 22-ம் தேதி, பிபிஆர்டி (ஏழை மக்களுக்கான வீட்டுரிமை திட்டம்) திட்டத்தின் கீழ், செமினி வாக்காளர்களுக்கு வீடுகள் பழுது பார்க்க உறுதியளிக்கப்பட்டதோடு, பரிசு கூடைகளும் வழங்கப்பட்டன.

இது இடைத்தேர்தலில் வாக்குகள் வாங்குவதற்கான நடவடிக்கை என்று, நெகிரி செம்பிலான் அம்னோ இளைஞர் பிரிவு, காஜாங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் புகார் அளித்தது.

இருப்பினும், பெர்சத்து தலைவர், முகிடின் யாசின், அந்நடவடிக்கை தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என்று சொன்னார்.

வீடுகள் பழுது பார்க்கும் நடவடிக்கை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று, செமினி இடைத்தேர்தல், பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பணிக் குழுவிற்குத் தலைமை ஏற்றிருக்கும் முகிடின் மேலும் கூறினார்.

இதற்கிடையே, இந்நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி, இடைத்தேர்தலில் தோல்விகண்ட தரப்பினர், தேர்தல் முடிவுகளை எதிர்க்கவும் செய்யலாம் என அஸார் தெரிவித்தார்.

முழுமையான தகவல்கள் இல்லாததால், தங்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.