காலியான ரந்தாவ் நாற்காலி 60 நாட்களில் நிரப்பப்படும் – தேர்தல் ஆணையம்

காலியான நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்ற தொகுதி, அடுத்த 60 நாட்களில் நிரப்பப்படும் என்று தேர்தல் ஆணையம் (இசி) தெரிவித்துள்ளது.

இசி தலைவர், அஸார் அஸிசான் ஹருண், பொதுத் தேர்தல் சட்டவிதி 1954, பிரிவு 36A (3) (a) கீழ், மத்திய நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, நீதிமன்ற அறிக்கையை இசி பெற்றுவிட்டதாக தெரிவித்தார். இதன் வழி, இன்று தொடக்கம் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் இரத்தாவதாகவும் அவர் சொன்னார்.

அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்க, இசி விரைவில் சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அஸார் தெரிவித்தார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் எஸ் ஶ்ரீராம், இசி வழங்கிய தேர்தல் அடையாள அட்டையை (பாஸ்), உடன்கொண்டுவர தவறியதால், பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் முகமட் ஹசான் போட்டியின்றி தேர்வு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே 23-ம் தேதி, முகமட் ஹசான் மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை, எனவே அவர் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனது செல்லுபடியாகாது என, நீதிமன்றத்தில் ஶ்ரீராம் வழக்கு தொடுத்தார்.

2019, பிப்ரவரி 16-ம் தேதி, பொதுத் தேர்தல் சிறப்பு நீதிமன்றம், ரந்தாவ் தொகுதியில், முகமட்டின் வெற்றி செல்லுபடியாகாது என்று கூறி, இரத்து செய்தது.

நீதிபதி அஸிமா ஒமார், வேட்பு மனுவைச் சமர்ப்பிக்க வரும் வேட்பாளர், முன்மொழிபவர் மற்றும் ஆதரவாளருக்கு, எந்த ஒரு நுழைவு அட்டையும் தேவை எனத் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்று அவரது தீர்ப்பில் கூறினார்.

  • பெர்னாமா