கம்போங் கச்சாவ் டாலாம் ஓராங் அஸ்லி குடியிருப்பு செமிஞ்யே நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.ஆனால், அதைச் சென்றடைவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. ஏனென்றால், இருப்பது ஒரே சாலை, அதுவமண்சாலை.
நல்ல சாலை இல்லாதிருப்பதால் அதன் குடியிருப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள், குறிப்பாக, ஆபத்து அவசர வேளைகளில்.
ஓராங் அஸ்லி சமூகத்தின் இன்னொரு பிரச்னை நிலம். 85 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் வசிக்கும் நிலம் பூர்விகக் குடிமக்களின் நிலம் என்று இன்னும் கெஜட்டில்(அரசிதழில்) பதிவாகவில்லை.
1935-இலிருந்து ஓராங் அஸ்லி மக்கள் அங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இதுவரை எதுவும் செய்யப்பட்டதில்லை என்கிறார் கம்போங் கச்சாவ் டாலாம் குடியிருப்பாளர் சங்கச் செயலாளர் மாட்சி டுமான்,25.
“அதிகாரிகள் எங்கள் பிர்ச்னகளைத் தீர்க்க முனைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு உடனடியாக தேவைப்படுவது ஒரு தார்சாலை. இப்போது இருப்பது மண்சாலை. மழைக் காலத்தில் அதைப் பயன்படுத்த முடியாது. வெளி உலகத்துடன் எங்கள் உறவு துண்டிக்கப்பட்டு விடுகிறது.
“அப்படிப்பட்ட நிலையில் அவசர மருத்துவ உதவி தேவை என்றால் என்ன வாகும்? சற்று நினைத்துப் பாருங்கள்”, என்றவர் பெர்னாமாவிடம் கூறினார்.