புகைப்பதற்குத் தடைவிதிக்கும் உத்தரவை எதிர்க்கும் மனு மீது மே6-இல் விசாரணை

உணவகங்களில் புகைப்பதைத் தடை செய்யும் சுகாதார அமைச்சின் உத்தரவை இரத்துச் செய்யக் கோரி புகைப்போர் உரிமை மன்றத்தின் எழுவர் செய்துள்ள மனு மே ஆறாம் நாள் விசாரணைக்கு வரும்.

அவ்வெழுவரும் புகைப்பது ஒரு குற்றச் செயல் அல்ல என்பதால் அது சட்டப்பூர்வமான ஒன்று என்கிறார்கள். எனவே, புகைப்பதற்கு எதிரான தடை தங்கள் அரசமைப்பு உரிமைகளை மீறும் செயல் என்ற அடிப்படையில் அவர்கள் அதை அகற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிகரெட்டுகளுக்கு பாவ வரி கட்டுவதால் எந்த இடத்திலும் புகைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உணவகங்களில் புகைக்காதவர்களுக்கு உள்ள உரிமைகள் புகைப்பவர்களுக்கும் உண்டாம்.

அத்தடை உத்தரவு சட்டத்துக்கு எதிரானது என்றும் அது முறைப்படி அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் அமைச்சு அது குறித்து புகைப்பாளர்களுடன் முன்கூட்டியே விவாதிக்கவில்லையாம்.

அரசாங்கம் புகைப்பதற்கு மாற்று இடங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை, உணவகங்களில் தனி இடங்களை ஒதுக்கிக் கொடுக்கும்படியும் உத்தரவிடவில்லை.

எனவே, புகைப்பதைத் தடை செய்யும் சுகாதார அமைச்சின் உத்தரவை இரத்துச் செய்து அது அரசமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.