செமினி இடைத்தேர்தல் | ‘பெர்காசா’ அரசு சாரா அமைப்பின் தலைவர், இப்ராஹிம் அலி, மதம் மற்றும் இனத்தின் பாதுகாப்பிற்காக, தான் பக்காத்தான் ஹராப்பானை (பிஎச்) ஆதரிக்கப்போவதில்லை; மாறாக, தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அவர்கள் தோல்வி கண்டதனால் அல்ல என்று கூறியுள்ளார்.
14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினாலும், தான் அதனை ஆதரிக்கப்போவதில்லை, காரணம் பிஎச் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்துக்கு ஆபத்தானது என்று அவர் தெரிவித்தார்.
“பிஎச் தனது வாக்குறுதிகளை 100 விழுக்காடு நிறைவேற்றிவிட்டது என்று வைத்துக்கொள்வோம், பெட்ரோல் விலை குறைந்துவிட்டது, சீனி விலை குறைந்துவிட்டது, ஆனால் இப்ராஹிம் அலி பிஎச் அரசாங்கத்தை ஆதரிப்பேன் என்பது உறுதியல்ல. காரணம் பெட்ரோல், சீனி போன்றவை எனக்கு முக்கியமல்ல.
“மக்களின் சுமையை நாம் குறைக்க வேண்டும், அது நமது கடமை, ஆனால் அதே சமயம், எனக்கு மிகவும் முக்கியமானது, நமது மண். நமது மண்ணைப் பிறர் ஏறி மிதிக்கக்கூடாது!,” என்றார் அவர்.
நேற்றிரவு, உலு செமிஞ்சே, கம்போங் பாரு பாசீரில், பிஎன் தேர்தல் இயக்க அறையில் நடந்த பெர்காசா ‘செராமா’வில், இப்ராஹிம் அலி அவ்வாறு பேசினார்.
ஜிஇ14-ல், பிஎச் வெற்றிபெற்று, அரசாங்கத்தை அமைத்தால் என்ன நடக்குமென்று நினைத்தோமோ, அது இப்போது நடந்துவிட்டது என அவர் மேலும் சொன்னார்.
பிஎச் தேர்தல் வாக்குறுதிகளில் மயங்கி, பல வாக்காளர்கள், சில அம்னோ உறுப்பினர்கள் உட்பட, பிஎச் வேட்பாளருக்கு வாக்களித்ததாக இப்ராஹிம் அலி தெரிவித்தார்.
“இப்போது என்ன நடந்தது? முன்பு, நான் எந்தப் பதவியிலும் இல்லை என்பதால், என்னை யாரும் ஆதரிக்கவில்லை, நான் மந்திரி அல்ல,” என்றார் அவர்.
கடந்த சில வருடங்களாக, மற்ற தரப்பினரை விட, பெர்காசா மட்டுமே, மதத்தைத் தற்காக்க, தைரியமாக போராடி வருவதாகவும் அவர் சொன்னார்.
பிஎச் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைலானி பற்றியும் இப்ராஹிம் அலி விமர்சித்தார்.
‘2-ம் தேதி வெற்றி பெற்றால், 3-ம் தேதி அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடுவேன்’ என்று ஐமான் பேசியது குறித்து கருத்துரைத்த அவர், ‘பிஎச்-இன் முந்தைய தலைவர்கள் இதுபோல் வெற்று வாக்குறுதிகளை வழங்கிவந்துள்ளனர், ஐமான் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார் போல,” எனச் சொன்னார்.