9 மாதங்களுக்குப் பிறகும் அமைப்பு முறை மாறவில்லை, இளம் வாக்காளர்களின் ஆதரவு மாற வாய்ப்புண்டு

செமினி இடைத்தேர்தல் | அமைப்பு முறையை மாற்றுவதாக அரசாங்கம் கொடுத்த உத்தரவாதம் இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை, இதனால் இளம் வாக்காளர்கள் அரசியல் கட்சியை மாற்ற அல்லது வேறு அரசியல் கட்சியை ஆதரிக்க முடிவெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் கூறியுள்ளார்.

நிக் அஸிஸ் அஃபிக், 25, செமினி இடைத்தேர்தல் வேட்பாளர், நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால், அதன் அமைப்பு முறையைச் சரி செய்ய வேண்டும் என்று, இன்று சீனார் ஹரியான் ஏற்பாடு செய்திருந்த, ஒரு நேரலை நிகழ்ச்சியில் கூறினார்.

“பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் பிஎச்-க்கு வாக்களித்த இளைஞர்களும் வாக்காளர்களும் இதுவரை அமைப்பு முறையில் மாற்றத்தைக் காணவில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, அமைப்பு முறையை மாற்றுவது எளிதான காரியம் அல்ல என்று வட மலேசியப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த, அரசியல் ஆய்வாளர், பேராசிரியர் முகமட் அஸிஸுட்டின் முகமட் சானி தெரிவித்தார்.

“ஓர் அரசியல் பார்வையாளராக, தேர்தல் அமைப்பு முறை மற்றும் அரசியல் நிதி பிரச்சினைகள் போன்றவற்றில், பல மாற்றங்கள் நடந்துவருவதை நான் பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தில் ஒரு கொள்கையையும் அமைப்பு முறையையும் மாற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் 2/3 ஆதரவு அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிறது. அதனால், அனுமதிக்கப்படும் சில கூறுகளை மட்டுமே மாற்ற அரசாங்கத்தால் முடிகிறது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, செமினி இடைத்தேர்தலில், இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு என்றும், மீதமுள்ளவர்கள் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் செய்தி ஊடகங்கள் கணக்கு பதிவு செய்துள்ளன.

இருப்பினும், அந்த 45 விழுக்காடு இளம் வாக்காளர்களில், 10 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தத் தேர்தலில் இளைஞர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என அசிஸூடின் தெரிவித்தார்.

அந்த 10 விழுக்காடு என்பது, வரும் சனிக்கிழமை, வாக்களிக்க வெளியாகும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் எனும் கணிப்பில் கூறப்படுவதாகும் என்று அவர் மேலும் சொன்னார்.

“கடந்த பொதுத் தேர்தலைப் போல் இது இருக்காது, காரணம் பெரும்பான்மை இளைஞர்கள் வேலை மற்றும் பிற காரணங்களுக்காக வெளியில் உள்ளனர்,” என்றார் அவர்.

  • ஃபிரிமலேசியாடுடே