செமினி இடைத்தேர்தலில் பிஎச்-க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – ஆய்வாளர்

எதிர்வரும் சனிக்கிழமை, செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், நம்பிக்கை கூட்டணி (பிஎச்) வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தற்போது, அரசாங்கமாக வீற்றிருக்கும் பிஎச் கூட்டணியின் பலம் மற்றும் மேல்நிலைக் கூறுகளைக் கருத்தில் கொண்டு, இதனைக் கூறுவதாக, வட மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், டாக்டர் முகமட் அஸிஸுட்டின் முகமட் சானி தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சிகளைக் காட்டிலும், பிஎச்-க்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, காரணம் இப்போது அவர்களின் ஆட்சி நடக்கிறது, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மக்கள் அவர்களை நம்பிதான் உள்ளனர்.

“கூடுதலாக, மக்கள் நலன் பிரச்சினைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் இங்கு முக்கியப் பிரச்சாரக் கருவாக இருப்பதால், அது பிஎச் வேட்பாளருக்கு வலிமையாகக் காணப்படுகிறது,” என்று நேற்று, கொம்பிளாக்ஸ் மீடியா காராங்கிராஃப்-இல் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய அவர் கூறினார்.

பிஎச் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், அந்த வெற்றியானது வாக்களிக்க வெளியாகும் வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் சொன்னார்.

எனவே, வாக்காளர்களை வாக்களிக்க வெளிவருமாறு ஊக்குவிக்க, பிஎச் அரசாங்கத்திற்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தால், அது தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும், எதிர்க்கட்சிக்கு அது சாதகமாகவும் அமையலாம்,” என்றார் அவர்.

-பெர்னாமா