செமிஞ்யே மக்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் ஹரப்பானால் நாட்டில் சீரமைப்புப் பணிகளைத் தொடர முடியும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.
முந்தைய அரசாங்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கடுமையாக பாடுபடுகிறார்.
“மலாய்க்காரர், சீனர், இந்தியர், அல்லது சாபா, சரவாக்கைச் சேர்ந்தவர்கள் என்ற வேறுபாடில்லாமல் மக்கள் கொதித்தெழுந்து அம்னோ/பிஎன்னை நிராகரித்ததால்தான் இன்று மகாதிர் பிரதமராக இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
“நாடு வளமிக்கது ஆனால் நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்தார்கள் அதனால் அவர்களை (பிஎன்னை) நிராகரித்தோம்”, என நேற்றிரவு செமிஞ்யே, பண்டார் ரிஞ்சிங்கில் ஒரு கலை நிகழ்ச்சியில் பேசியபோது அன்வார் கூறினார்.
அரசாங்கம் அதன் பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.
“பொறுத்துக் கொள்ளுங்கள். நாட்டின் வளத்தை வேறு யாரும் கொள்ளையடிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். மெதுமெதுவாக மாற்றங்களைக் கொண்டு வருகிறோம்”, என்றாரவர்.