குறைந்தபட்ச சம்பளமான ரிம1,100 எல்லாராலும் கொடுக்க முடியாத ஒன்று என்பதால் வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு அளவில் குறைந்தபட்ச சம்பளம் வரையறுக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் முன்மொழிந்திருப்பது ஒரு பொருத்தமற்ற வாதம் என்று பிஎஸ்எம் கூறியது.
அமைச்சரின் அண்மைய பேச்சுகளைப் பார்க்கும்போது அவர் முதலாளிமார்களுக்குச் சலுகை காட்டுவதுபோல் தெரிகிறது என பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.அருள்செல்வன் சாடினார்.
“மனிதவள அமைச்சர் என்பதை ‘முதலாளிகள் நலம்பேணும் அமைச்சர்’ என்று மாற்றிக்கொள்வது பொருத்தமாக இருக்கும்”, என்றாரவர். அருள்செல்வன் செமிஞ்யேயில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிஎஸ்எம் வேட்பாளர் நிக் அசிஸ் அபிக் அப்துலுக்காக பரப்புரை செய்து வருகிறார்.
புத்ரா ஜெயா, முதலில் குறைந்தபட்ச சம்பளம் என்பது ரிம1050 என்றுதான் நிர்ணயித்திருந்தது. பிறகு அதை ரிம1,100 என்று உயர்த்தியது.
பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருப்பதுபோல் குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 உயர்த்தப்பட வேண்டும் என பிஎஸ்எம் விரும்புவதாக அருள்செல்வன் குறிப்பிட்டார்.
அமைச்சர் அடிக்கடி பல்டி அடித்துக் கொண்டிருந்தால் அவரைத் தொழிலாளர்கள் புறந்தள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.