சமூக ஆர்வளர்களும் வழக்கறிஞர்களும் பி.எஸ்.எம். வேட்பாளரை ஆதரிக்கின்றனர்

செமினி இடைத்தேர்தல் | 52 சமூக ஆர்வளர்களும் வழக்கறிஞர்களும், செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)  வேட்பாளர், நிக் அஸிஸ் அஃபிஃ அப்துல்லுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து உள்ளனர்.

செமினி இடைத்தேர்தலில் போட்டியிடும் பெர்சத்து மற்றும் அம்னோ இரண்டும், இன அரசியல் அடிப்படையிலான கட்சிகள் என்பதால், பி.எஸ்.எம். வேட்பாளரே சிறந்த தேர்வு என்று, அக்குழுவைப் பிரதிநிதித்த சமூக ஆர்வலர், குவா கியா சூங் தெரிவித்தார்.

“பெர்சத்து மற்றும் அம்னோ இரண்டும் இன அரசியலை நடத்துவதால், அவற்றிற்குப் புதிய மலேசியாவில் இடமில்லை,” என்று செமினி பி.எஸ்.எம். தேர்தல் நடவடிக்கை அறையில், பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அவருடன் பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ் இருந்தார்.

பிஎன் வேட்பாளர், ஜக்காரியா ஹனாஃபியும் பிஎச் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைலானியும், பெர்சே 2.0 ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்றும் அந்த முன்னாள் டிஏபி எம்பி கேள்வி எழுப்பினார்.

“அவர்கள் இருவரும் பி.எஸ்.எம். வேட்பாளருடன் விவாதம் செய்ய விரும்பவில்லை. புதிய மலேசியா என்று நாம் கூறுவதற்கு அர்த்தம் என்ன? புதிய மலேசியா என்றால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமகாலப் பிரச்சனைகள் குறித்து, தைரியமாக விவாதிக்க முன்வர வேண்டும்.

“அவர்கள் இருவரும், தாங்கள் சார்ந்த கட்சியின் சின்னத்தையும் கொடியையும் தற்காக்கவில்லை. அவர்கள் அவர்களை மட்டுமே பிரதிநிதித்து தேர்தலில் நிற்கின்றனர், கட்சியை அவர் பிரதிநிதிக்கவில்லை,” என அவர் மேலும் சொன்னார்.

‘அங்கள் கெந்தாங்’ என்று அவ்வட்டார மக்களிடையே பிரபலமான, சுயேட்சை வேட்பாளர், குவான் ச்சீ ஹேங்கை ஏன் ஆதரிக்கவில்லை என்பதனையும் குவா விளக்கினார்.

“எனக்கு அவர் அறிமுகம் இல்லை. பி.எஸ்.எம். எனக்கு நன்கு அறிமுகமானதொரு கட்சி, நிக் அஸிஸ்-உம் எனக்குப் பழக்கமானவர், எனக்கு பிஎச், பிஎன் எல்லாம் தெரியும், ஆனால், இந்த ‘அங்கள் கெந்தாங்’கை எனக்குத் தெரியாது.

“அவரின் சாதனை என்ன? அவர் யார், அவர் என்ன செய்யவுள்ளார், அவரின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன, அவர் யாரைப் பிரதிநிதிக்கிறார்? அவர் ஒரு தனிநபரா அல்லது யார்? மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சமூக நீதி பற்றிய அவரது நிலைப்பாடு என்ன?” என்று குவா கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, நிக் அஸிஸ் இந்த இடைத்தேர்தலில் தனக்கு உதவிகள் வழங்கி வரும் தரப்பினர் பற்றி தெரிவித்தார்.

“எனக்கு முதலாளிகள் தொடர்பு ஏதும் இல்லை, பெருநிறுவன முதலீட்டாளர்கள் யாரும் இந்தப் போராட்டத்தில் என்னுடன் இல்லை.

“ஆனால், மலேசியர்களை மேம்பட்ட ஒரு சமூகமாகக் கொண்டுவர, கடினமாக உழைக்கும் சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது,” என்று அவர் கூறினார்.