தோட்டத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதில், சிலாங்கூர் அரசாங்கம் தோல்வி, பி.எஸ்.எம். குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல், தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, சிலாங்கூர் மாநில அரசாங்கம் தவறிவிட்டது, அவர்களிடம் ‘பேச்சு மட்டும்தான், செயல் இல்லை’, நேர்மையற்ற ஒரு மாநில அரசாங்கம் அது என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி 26-ம் தேதி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதிராவ், தொழிலாளர்கள், குறிப்பாக தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, மாநில அரசாங்கம் சட்டங்களை இயற்றவுள்ளதாக அறிவித்தார்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதற்கான வரைவுத் திட்டங்களை முன்வைக்க, மனித வளத்துறை அமைச்சர் எம் குலசேகரனைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் கணபதிராவ் கூறியிருந்தார்.

செமினி தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க, குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைக் கவர, அவர் முன்னெடுத்திருக்கும் ஒரு மலிவான செயல் இதுவென, பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார்.

“சிலாங்கூர் மாநில அரசாங்கம், தொழிலாளர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் அதிக முன்னுரிமை கொடுக்கவில்லை.

பாங்கி & திரான்ஸ்லோயல் தோட்டத் தொழிலாளர்கள்

“உண்மையில், எந்தவொரு உறுதிப்பாடும் இல்லாமல், பழைய வாக்குறுதிகளையே கணபதி ராவ் மறுசீரமைக்கிறார். முன்மொழியப்படும் இந்தச் சட்டம் எப்போது நிறைவு செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை,” என அருட்செல்வன் மேலும் சொன்னார்.

கணபதி ராவின் சமீபத்திய இந்த அறிக்கை, பல ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் வெளியிட்டுவரும் அறிக்கைகளையே எதிரொலிக்கிறது, முந்தைய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் ஏ சேவியர் ஜெயக்குமார் செய்த அறிவிப்புகள் உட்பட என அருட்செல்வன், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, 2008, ஏப்ரல் 16-ம் திகதி, சிலாங்கூர் மாநில மேம்பாட்டிற்காகத் துண்டாடப்பட்டத் தோட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, நிலம் அல்லது மலிவுவிலை வீடுகளை வழங்கும் வகையில், சிலாங்கூர் மாநில அரசு, சட்டங்களை இயற்றும் என்று டாக்டர் சேவியர் உறுதி அளித்திருந்ததாக அருட்செல்வன் சொன்னார்.

(ஆதாரம் : https://www.thestar.com.my/news/nation/2008/04/16/selangor-to-help-estate-workers/)

“இது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, காரணம் சேவியரின் கண்காணிப்பில் இயங்கிய அந்தத் தோட்டத் தொழிலாளர் பணிக்குழுவில் நானும் இருந்தேன். இந்தப் பணிக்குழு ஒரு சட்டவரைவை உருவாக்கியது. அது பின்னர், சிலாங்கூர் மாநிலச் சட்ட ஆலோசகரிடம் வழங்கப்பட்டது. ஆனால், அந்தச் சட்ட வரைவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அது அப்படியே இறந்து போனது.

“சேவியரின் பதவிக்காலம் நிறைவடைந்தப் பின்னர், மீண்டும் நான் முன்மொழியப்பட்ட சட்ட வரைவை, 2013-ல் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம் சமர்ப்பித்தேன். அதன் நகல், கணபதி ராவ்வுக்கும் அனுப்பப்பட்டது, மறுபடியும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை,” என்றார் அவர்.

கணபதி ராவ்வும் சிலாங்கூர் மாநில அரசும், உண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளனர் என்றால், அவர்களின் சொந்த சக்திக்கு (மாநில அரசு) உட்பட்டே நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியும், அவர்கள் மனித வளத்துறை அமைச்சரைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், நிலம் சார்ந்த விஷயங்கள், மாநில அரசின் அதிகார எல்லைக்குள் வருகின்றன என்று அவர் விளக்கப்படுத்தினார்.

“இதற்கு முன், லிம் ஆ லேக் மனித வளத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து பல கொள்கைகளை நாங்கள் பார்த்துவிட்டோம். சட்டங்கள் இல்லாததால், பெரும்பாலான கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

“உதாரணத்திற்கு, மிகவும் பிரபலமான, ‘துன் ரசாக் வீட்டுரிமை திட்டம்’. மொத்த தோட்டங்களில், வெறும் 5 விழுக்காடு தோட்டங்களில் மட்டுமே அது செயல்படுத்தப்பட்டது, அதுவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை, ஏனென்றால், அது சட்ட அந்தஸ்தைப் பெறவில்லை,” அருட்செல்வன் சுட்டிக்காட்டினார்.

“இங்கு அடிப்படை பிரச்சினை என்னவென்றால், பக்காத்தான் ஹராப்பான் கீழ் இயங்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க எந்தச் சட்டத்தையும் இயற்றும் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

சைம் டர்பி, ஒரு பெருந்தோட்ட நிறுவனம் மட்டுமல்ல, அது ஒரு ஜி.எல்.சி நிறுவனமும்கூட. ஆக, இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த, உண்மையில் எந்தவொரு பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதனைச் செயல்படுத்த, பிஎச் அரசாங்கத்திற்கு உண்மையில் மனம் இருக்கிறதா, ஆர்வம் இருக்கிறதா என்பதே நமது கேள்வி,” என அருட்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இடைத்தேர்தலில், வாக்குகளை மட்டும் கவனத்தில் கொண்டு பேசாமல், 10 ஆண்டுகள் தாமதமாகியுள்ள தங்கள் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும்படி, பி.எஸ்.எம். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.