டாக்டர் எம் : செமினியில், பிஎன்-னுக்கு வாக்களிப்பது வீண்

செமினி இடைத்தேர்தல் | நாளை நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்காளர்கள் பிஎன் அல்லது மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது வீண் என்று டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார்.

மத்தியம் மற்றும் மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இல்லாத எதிர்க்கட்சி வேட்பாளர்களால், எந்தவொரு மேம்பாட்டையும் கொண்டுவர முடியாது, மக்களின் நலனைப் பாதுகாக்க முடியாது என அவர் சொன்னார்.

அதுமட்டுமின்றி, பிஎச் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைலானி, மாநில மற்றும் மத்திய அரசின் ஆதரவைப் பெற்றிருப்பதால், செமினி வாக்காளர்களின் தேவையை அவரால் பூர்த்தி செய்ய முடியுமென்றும் மகாதிர் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தால், அவரால் என்ன செய்ய முடியும்? அதுமட்டுமின்றி, பிஎன் –ஐத் தூக்கிப்போட்ட முதல் மாநிலம் சிலாங்கூர்தான்,” என்றார் அவர்.

நேற்றிரவு, செமினியில் நடந்த ‘செராமா பெர்டானா பக்காத்தான் ஹராப்பான்’ நிகழ்ச்சியில், டாக்டர் மகாதிர் இவ்வாறு பேசினார்.

அவருடன், பெர்சத்து தலைவர் முகிடின் யாசின், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் ஏங், அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆட்சிக்கு வந்து 9 மாதங்களே ஆகியிருந்த போதும், முந்தைய அரசாங்கத்தால் சேதமடைந்த நாட்டின் பல சூழல்களை மீட்க, பிஎச் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

“மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் பிஎச் எடுத்துவருகிறது. நாட்டில் உள்ள அனைத்து இனங்களும், நாட்டின் செல்வத்தைச் சமமாக, நியாயமான முறையில் அனுபவிக்க வேண்டும் என்பதே பிஎச் அரசாங்கத்தின் விருப்பம்,” என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

“எனவே, செமினி மக்கள், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இவ்வட்டார மக்களுக்கு மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்,” என மகாதிர் செமினி வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.