செமினி இடைத்தேர்தல் | தேர்தல் தினத்திற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைந்த காலமே எஞ்சியிருக்கும் வேளையில், கேமரன் மலை இடைத்தேர்தல் பிரச்சாரத்தை விட செமினியில் பிரச்சாரம் சிறப்பாக அமைந்ததாக தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்துள்ளது.
இதுவரை செனினியில், அதிகமான புகார்கள் – சமூக ஊடகம் அல்லது செய்திதாள்கள் உட்பட – எதையும் தாங்கள் பெறவில்லை என்று இசி தலைவர், அஸார் அஸிசான் தெரிவித்தார்.
“கேமரன் மலையில், பணம் கொடுத்தது, அரசாங்கச் சொத்துகளைப் பயன்படுத்தியது எனப் பல்வேறு புகார்கள் வந்தன, ஆனால் இங்கு அதுபோன்ற புகார்கள் குறைந்துவிட்டன.
“அதுமட்டுமின்றி, வாக்காளர்களுக்கு ஒதுக்கீடுகள் கொடுப்பதைக் கூட ஓர் அமைச்சர் நிறுத்திவிட்டார். அது ஒரு நல்ல நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்னர் இதுபோல நடந்ததில்லை, இது ஒரு முன்னேற்றம்,” என்றார் அவர்.
நேற்றுவரை, 33 போலிஸ் புகார்களைப் பெற்றுள்ளதாகவும், அதேக் காலகட்டத்தில் கேமரனில் 43 புகார்கள் செய்யப்பட்டதாகவும் அஸார் தெரிவித்தார்.
ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து எந்தவொரு புகாரும் இதுவரை வரவில்லை என்ற அஸார், கேமரன் மலையில் 13 புகார்களைப் பெற்றதாகக் கூறினார்.
நாளை செமினி இடைத்தேர்தலில், 24 வாக்களிக்கும் மையங்கள் மற்றும் 116 வாக்குச் சாவடிகளில் 996 அதிகாரிகள் பணிக்கமர்த்தப்படுவர்.
தேர்தல் பிரச்சாரம், இன்றிரவு மணி 11.59-உடன் முடிவுக்கு வருகிறது.