செமினி இடைத்தேர்தல் | எதிர்க்கட்சிக்கு வாக்களிக்களிப்பது பயனற்றது என்ற பிரதமர் டாக்டர் மகாதிரின் கூற்று – பிஎன் காலத்தைப் போன்று – வாக்காளர்களை அச்சுறுத்துவது போல அமைந்துள்ளது என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது.
டாக்டர் மகாதிரின் மலிவான அரசியல் நடவடிக்கை இதுவென்று, பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார்.
முந்தைய பிஎன் ஆட்சியின் போதும், இதுபோலவே, எதிர்க்கட்சிக்கு வாக்களித்தால் அத்தொகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் தடைபடும் என வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு வந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
“இது பிஎன் நமக்கு கற்றுத்தந்த பழைய அரசியல்…. இது அழுக்கான, மலிவான அரசியல்.
“இது ஒருவகை அச்சுறுத்தல். பிஎன் அல்லது பி.எஸ்.எம். வென்றால், அரசாங்கம் அங்கு கிளினிக் கட்டிக்கொடுக்காது என்று இதற்கு அர்த்தமா?” என்று இன்று செமினியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அவர் கேள்வி எழுப்பினார்.
நேற்றைய செராமா ஒன்றில், மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தில் அதிகாரம் இல்லாத எதிர்க்கட்சி வேட்பாளர்களால், செமினியில் மேம்பாடுகளைக் கொண்டுவர முடியாது, மக்களின் நலனைப் பாதுகாக்க முடியாது என்று மகாதிர் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிஎன் வேட்பாளர், ஜக்காரியா, பிஎன்–னுக்கு வாக்களிப்பதன் வழி, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிஎச் அரசாங்கத்திற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே, பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ் அஃபிஃ அப்துல், இனியும் இதுபோன்று பிரச்சாரம் செய்ய வேண்டாமென மகாதிரைக் கேட்டுகொண்டார்.
உண்மையில், பிஎச் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது, அதுமட்டுமின்றி பலவற்றில் ‘யு-டெர்ன்’ (திரும்பப் பெற்றுக்கொண்டது) செய்துவிட்டது என்றும் நிக் தெரிவித்தார்.