செமினி இடைத்தேர்தல் | “சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில், செமினி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, ஒரு சிறப்பான தேர்வாக, தரமான ஒரு வேட்பாளரை நாங்கள் (பி.எஸ்.எம்.) காண்பித்திருக்கிறோம். இனி, செமினி சட்டமன்ற உறுப்பினர் யார் என்பதைத் தீர்மானிப்பது, செமினி வாக்காளர்களின் கைகளில் உள்ளது.”
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினரும் செமினி இடைத்தேர்தல் பிரச்சார இயந்திரத்தின் இயக்குநருமான எஸ் அருட்செல்வன், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, பி.எஸ்.எம். அதன் வேட்பாளர் நிக் அஸிஸ் அஃபிஃ அப்துல் உடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவை :
- வேட்பாளர் சொத்து அறிவிப்பு
- இனவெறி எதிர்ப்பு உறுதிமொழி
- பிற வேட்பாளர்களுக்கு எதிரான, தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்தல்
- தேர்தல் அறிக்கையை முதலில் முன்வைத்த வேட்பாளர்
- செமினி வாழ் மக்களுக்குத் தேவையான, அவர்கள் விருப்பத்திற்கு இணக்கமான உள்ளூர் தேர்தல் அறிக்கை
- பெர்சே 2.0 ஏற்பாடு செய்த வேட்பாளர் விவாதத்தில் வாதிட சம்மதித்தது, பின்னர் அது இரத்து செய்யப்பட்டதால், அஸ்ட்ரோ அவானியில் நேரடி ஒளிபரப்பில் கலந்துகொண்டது
- குறைந்தபட்ச சம்பளம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொது சுகாதார அமைப்புகள் எதிர்நோக்கும் ஆபத்துகள், குறைந்த விலை குடியிருப்புகள், பொதுக் கல்வி மற்றும் பொது போக்குவரத்து பிரச்சினைகள் போன்ற பல்வேறு தேசியப் பிரச்சினைகளை வெற்றிகரமாக வெளிகொணர்ந்து காட்டியது.
- செமினியில் பிரச்சாரம் செய்ய, மற்ற கட்சிகள் தலைவர்களைக் (பிரதமர், அமைச்சர்கள் உட்பட) கொண்டுவந்தபோது, பி.எஸ்.எம். ஒப்பந்தத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்களை நேரடியாக ஊடகங்களில் பேச அழைத்து வந்தது.
- மக்கள் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த, தினசரி பத்திரிக்கை மாநாடுகள் நடத்தப்பட்டது
- மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க, ஒவ்வொரு நாளும் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்புகள் நடத்தப்பட்டன
- மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றது
பி.எஸ்.எம். மேற்கொண்ட சில பிரச்சாரங்கள் அரசாங்கத்தின் நேரடி பார்வையை ஈர்த்தது, உண்மையில் செமினி மக்களுக்குப் பலனளித்ததாக அருட்செல்வன் தெரிவித்தார்.
“செமினியிலுள்ள சுகாதாரக் கிளினிக்கை, அரசாங்க மருத்துவமனையாக மேம்படுத்துதல், டோல் சாவடிகளை அகற்றுதல், தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க புதிய சட்ட வரைவு, ‘மைசலாம்’ காப்பீட்டுத் திட்டம் எனப் பி.எஸ்.எம். கையிலெடுத்தப் பல பிரச்சனைகள் அரசாங்கத்தின் நேரடி பார்வையைப் பெற்றது,” என்றார் அவர்.
பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ், உள்ளூர் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர், அவற்றைத் தெளிவாக விளக்கப்படுத்தக் கூடியவர் என ஊடகங்களின் பாராட்டுகளைப் பெற்றதாக அருட்செல்வன் கூறினார். நிக் அஸிஸ் மட்டுமின்றி, பி.எஸ்.எம். தேர்தல் இயந்திரமும் மிகச் சிறப்பாக செயலாற்றி ஊடகங்களின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில், இளைஞர்கள் மற்றும் வட்டார மக்களின் கருத்துகளும் ஊக்கமளிப்பதாக இருந்தன. முந்தையத் தேர்தலில் வாக்களிக்காதவர்களும், இம்முறை பி.எஸ்.எம். கட்சியை ஆதரித்துப் பேசினர், மூன்றாவது அணி தேவை என்று கருத்துரைத்தனர் என்றும் அவர் சொன்னார்.
இருப்பினும், இம்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது என்று அருட்செல்வன் தெரிவித்தார்.
பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ், செமினி வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வெளிவர வேண்டும், மக்களின் பிரச்சனைகளைச் சட்டமன்றத்தில் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட ஒரு வேட்பாளரைத் தேர்ந்த்தெடுக்க வேண்டும் என வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
“செமினி இடைத்தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளார்களில், தான் மிகச் சிறந்ததொரு தேர்வு என நிக் அஸிஸ் காட்டியுள்ளார். வயதில் ஆகச் சிறியவராக இருந்தபோதிலும், அனுபவத்தில் முதிர்ச்சியைக் கொண்டுள்ளார், சமுதாயப் பிரச்சனைகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்து வருவதோடு, அவற்றை விவாதிக்கும் ஆற்றலும் பெற்றிருக்கிறார். செமினி மக்களுக்கு நிக் அஸிஸ்தான் சிறந்த பிரதிநிதி என்று பி.எஸ்.எம். கருதுகிறது.”
எனவே, செமினி வாக்காளர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அருட்செல்வன் கேட்டுக்கொண்டார்.