செமிஞ்யே சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்களிப்பதற்காக 24 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாலை மணி 5.30வரை அவை திறந்திருக்கும்.
பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த பக்கத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகம்மட் நோர் காலமானதால் நடைபெறும் இந்த இடைத் தேர்தல் நான்குமுனைப் போட்டியாக அமைந்துள்ளது. ஹரப்பான் வேட்பாளர் முகம்மட் அய்மான் சைனாலி, பிஎன் வேட்பாளர் சக்கரியா ஹனாபி, பிஎஸ்எம்மின் நிக் அசிஸ் அபிக் அப்துல், சுயேச்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் ஆகிய நால்வரும் இங்கு போட்டியிடுகின்றனர்.
பெர்சத்துக் கட்சி ஒரு இடைத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை. அந்த வகையில், இந்த இடைத் தேர்தல் டாக்டர் மகாதிர் முகம்மட்டைத் தலைவராகக் கொண்டுள்ள பெர்சத்துவுக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதைக் காண்பிக்கும் அளவுகோலாக அமைகிறது என்றும் சொல்லலாம்.
ஜனவரி மாதம் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிஎன், மக்கள் ஆதரவு தன் பக்கம் திரும்புவதாக நம்புகிறது. அதனால் இங்கும் வெற்றி தனக்கே என்ற நம்பிக்கையில் உள்ளது.
செமிஞ்யே-இல் 54,503 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 68 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 16.7 விழுக்காட்டினர் சீனர்கள், 13.8 விழுக்காட்டினர் இந்தியர்கள்.
காலை மணி 10.45வரை 28 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.