தேர்தல் ஆணையம் செமிஞ்யே இடைத் தேர்தலில் பிற்பகல் மணி ஒன்றுவரை வாக்களித்த வந்தவர் எண்ணிக்கை 50 விழுக்காடு என்று அறிவித்துள்ளது. அத்தொகுதியில் மொத்தம் 54,503 வாக்காளர்கள் உள்ளனர்
இதனிடையே தேர்தல் ஆணையத் தலைவர் அஸ்கார் அசிசான் ஹாரு, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் படம் பொறிக்கப்பட்ட பதாதை வாக்களிப்பு மையத்துக்கு அருகில் தொங்க விடப்பட்டிருந்ததைக் கண்டித்தார்.
ரோஸ்மாவின் படத்தைக் கொண்டிருந்த அப்பதாதையில் “Siapa boss? Aku lah boss (யார் போஸ்? நானே போஸ்)” என்றும் எழுதப்பட்டிருந்தது.
நஜிப்பின் ‘போஸ்கூ’ இயக்கத்தைக் கிண்டல் செய்து ரோஸ்மாதான் உண்மையான போஸ் என்பதுபோல் சித்திரிக்கும் அப்பதாதை அமைதியைக் கெடுக்கக் கூடியது என்று இசி தலைவர் கூறினார்.
“அது ஏளனப்படுத்துவதாகவும் சினமூட்டுவதாகவும் உள்ளது. இப்படிப்பட்ட செயல்கள் நிற்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
வாக்களிப்பு நாளில் பிரச்சார நடவடிக்கைகள் கூடாது என்பதையும் அஸ்கார் நினைவுறுத்தினார். இலவச உணவு வழங்குவது, “எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூறுவதுகூட தப்புத்தான் என்றாரவர்.